மூன்றாண்டு சட்டப் படிப்பு சேர்க்கை: செப்.3-இல் தொடக்கம்
மூன்றாண்டு (எல்.எல்.பி.) சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்க உள்ளது.
அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிளஸ்-2 முடித்தவர்களுக்கான 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள் மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. முன்னதாக, 5 ஆண்டுகள் சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இப்போது மூன்றாண்டு சட்டப் படிப்பு சேர்க்கையை பல்கலைக்கழகம் தொடங்க உள்ளது.
இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு தேதி குறித்த விவரங்களை பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி, கலந்தாய்வு செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்கத் தகுதியுள்ள மாணவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் விரைவுத் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத, தகுதிவாய்ந்த மாணவர்களும் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.