Flash News காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவை நீக்கி குடியரசுத் தலைவர் அறிக்கை வெளியீடு
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ மற்றும் 370ஆவது பிரிவுகளை நீக்குதல், ஜம்மு-காஷ்மீரை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என பிரித்தல் போன்றவற்றிற்காக இந்த முன்னேற்பாடுகள் செய்யப்படுவதாக, தகவல்கள் பரவின.
இந்நிலையில், நேற்று முழுவதும் அமித்ஷா ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று காலை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமரின் இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காஷ்மீர் விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை கொண்டுவந்தார். இதன்படி, காஷ்மீருக்கு 1954ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படும் என்றார்.
இதேபோல, லடாக் மக்களின் நீண்ட கால விருப்பத்தை ஏற்று, அப்பகுதி ஜம்மு-காஷ்மீரில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு, சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அமையும் என்றார்.
ஜம்மு-காஷ்மீரும் பாதுகாப்பு காரணங்களுக்காக சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக அமையும் என அமித்ஷா அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னரும், அறிவிப்புக்கு பின்னரும் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதனிடையே, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்கும் குடியரசுத் தலைவரின் அறிவிப்பாணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால் 35ஏ பிரிவும் முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை அடுத்து, பதற்றம் நிலவுவதன் காரணமாக இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை உச்சபட்ச தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது