TNTET 2019 Result - 1,500 ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல்
ஆசிரியர் தகுதி தேர்வில், 1 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்ற நிலையில், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, தமிழகத்தில், 2011ல், 'டெட்' என்ற ஆசிரியர் தகுதிதேர்வு முறை அறிமுகமானது.
டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற, ஐந்தாண்டு அவகாசம் அளிக்கப்பட்டது.பின், இந்த அவகாசம் ஒவ்வொரு ஆண்டும், நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, 2019, மார்ச்சிற்கு பின், கால அவகாசத்தை நீட்டிக்க, மத்திய அரசு மறுத்து விட்டது.இதையடுத்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத, 1,500 ஆசிரியர்களுக்கான சம்பளத்தை நிறுத்தி, ஏப்ரலில், பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது.இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, 'எட்டு ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் வழங்கியும், ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற, 60 ஆயிரம் பேர், வேலைக்கு வர தயாராக உள்ளனர்' என, பள்ளி கல்வி துறை தெரிவித்தது.இதையடுத்து, 1,500 ஆசிரியர்களுக்கும் நிறுத்தப்பட்ட சம்பளத்தை வழங்க உத்தரவிட்டதோடு, ஜூனில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவும், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.இந்நிலையில், ஜூனில் நடந்த தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. முதல் தாளில், 1 சதவீதம் பேரும்; இரண்டாம் தாளில், 1 சதவீதத்துக்கும் குறைவாகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதாவது, இரண்டு தாளிலும் சேர்த்து, தேர்ச்சி பெற்றவர்கள், 1,000க்கும் குறைவு என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிலும், புதிய தேர்வர்களே, அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள, 1,500 ஆசிரியர்களில், குறைந்த அளவில் தான், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களை தவிர, மீதமுள்ளவர்களின் வேலைக்கு, ஆபத்து ஏற்பட்டுள்ளது.தேர்ச்சி பெறாதவர்கள், மீண்டும் நீதிமன்றத்தை நாடி, கூடுதல் அவகாசம் பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.