தவறான 3 கேள்விகளால் குரூப் - 4 தேர்வில் குழப்பம்
தமிழகம் முழுவதும், 14.5 லட்சம் பேர் எழுதிய, குரூப் - 4 தேர்வில், மூன்று கேள்விகளில் குழப்பம்உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இந்த கேள்விகள், வல்லுனர் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளில், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட, எட்டு பதவிகளில், காலியாக உள்ள, 6,491 இடங்களை நிரப்ப, 14.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வில், 300 மதிப்பெண்களுக்கு, 200 கேள்விகள் கேட்கப்பட்டன.
ஒவ்வொரு வினாவுக்கும்,நான்கு விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டு, அதில், சரியான விடையை தேர்வு செய்யும் வகையில், வினாத்தாள் அமைக்கப்பட்டது. வினாத்தாளில், சில கேள்விகளுக்கான குறிப்புகளில், சரியான விடையே இல்லை என, புகார் எழுந்தது. இந்நிலையில், குரூப் -4 தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பு, நேற்று, டி.என்.பி.எஸ்.சி., எனும் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மூன்று கேள்விகள் தவறாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.பொது அறிவு பிரிவில் இடம் பெற்றுள்ள, 'இந்தியஅரசியலமைப்பு சட்டத்தின், எந்த அட்டவணை, அடிப்படை உரிமைகளை விளக்குகிறது' என்ற கேள்விக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட விடைக்குறிப்புகள் சரியாக உள்ளன. அதேபோல், தமிழ் வழி கேள்வித்தாளில், 'உரிமைகள்' என்ற இடத்தில், 'கடமைகள்' என்றும், 'அட்டவணை' என்ற இடத்தில், 'விதி' என்றும், தவறான மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு கேள்வியில், 'தகவலறியும் உரிமை சட்டம், இந்திய பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட நாள்' என்பதற்கு, சரியான விடையான, '2005, ஜூன், 15' என்பது, விடைக்குறிப்பில் இல்லை. இன்னொரு கேள்வியில், 'முதலாம் லோக்சபா கலைக்கப்பட்ட நாள் எது?' என்று கேட்கப்பட்டுள்ளது. இதில், தமிழ் மொழிபெயர்ப்பில், 'குடியரசு தினம்' என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று கேள்விகளும், இறுதி முடிவுக்காக, வல்லுனர் குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. மற்ற கேள்விகளுக்கு, உத்தேச விடைகள் தரப்பட்டு உள்ளன. அவற்றில் பிழை இருந்தால், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், உரிய ஆதாரங்களுடன், வரும், 17க்குள் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.