‘கனவு ஆசிரியர்’ விருது மெய்ப்படுமா அல்லது வெறும் கனவா... ஆசிரியர்கள் குழப்பம்!
‘கனவு ஆசிரியர்’ விருது மெய்ப்படுமா அல்லது வெறும் கனவா... ஆசிரியர்கள் குழப்பம்!
“சிறப்பாகச் செயல்படும் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர் விருது’ வழங்கப்படும்'' என, கடந்த வாரம் அறிவித்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே நல்லாசிரியர் விருது வழங்கும் நிலையில், ‘கனவு ஆசிரியர் விருது’ கல்வித் துறையில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம்.
“கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித் துறைக்கான விவாதத்தின்போது ‘கனவு ஆசிரியர் திட்டம்’ அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஓராண்டு காலம் நிறைவடையும் தறுவாயில், இப்போதுதான் இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. இந்தத் திட்டத்துக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்” என்று முன்னுரை கொடுத்தார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர். நல்லாசிரியர் விருதுக்கு இவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் விருது வழங்கப்படவில்லை. இதற்கான காரணத்தை விவரித்தார், “நல்லாசிரியர் விருதுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் வைத்திருந்தாலும், தேர்ச்சி விகித அடிப்படையிலேயே வழங்குகின்றனர்.
அதுவும் ஓய்வுபெறும் வயதில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் விருது வழங்குகிறது பள்ளிக் கல்வித் துறை. தற்போது இளைய ஆசிரியர்கள் விருது பெறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்வதா அல்லது மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரிடையாக விசிட் செய்து ஆசிரியர்களைத் தேர்வுசெய்வார்களா என்பது குறித்து, எந்தத் தகவலும் இல்லை. மாவட்டக் கல்வி அலுவலரின் மனம் கவர்ந்த ஆசிரியரையே விருதுக்குப் பரிந்துரைக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
கடந்த ஆண்டு நல்லாசிரியருக்கு விண்ணப்பிக்கும்போது முதலில் ‘விண்ணப்பிக்கவேண்டிய அவசியமில்லை' என்றனர். ஆனால், விண்ணப்பித்தவர்களை மட்டுமே தேர்வுசெய்தனர். இந்த ஆண்டு இதுபோன்ற குழப்பமான நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், தகுந்த நிதி ஒதுக்கீடு இல்லாமல் நடத்தப்படும் திட்டம் கனவு திட்டமாகாமல் இருந்தால் சரிதான்" என்றார்.
கனவு ஆசிரியர் விருது பெற, ஐந்து ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியிருக்க வேண்டும். கம்ப்யூட்டர், செல்போன், ஆடியோ - வீடியோ சாதனங்கள், இணையதளங்கள் போன்ற நவீன தகவல் சாதனங்கள் மூலம் மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தலை மேம்படுத்தியிருக்க வேண்டும். மாணவர்களின் வாசிப்புத்திறனை வளப்படுத்தியிருக்க வேண்டும். மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் ஆசிரியராக இருக்க வேண்டும். `பள்ளி வளாகத்தைப் பசுமையாக மாற்றியமைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும்' என அறிவித்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. தகுந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய மாநிலக் குழு, மாவட்டக் குழு என இரண்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
மாவட்டக் குழு, ஒவ்வொரு பிரிவிலிருந்து நான்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து மாநிலக் குழுவுக்கு அனுப்பிவைக்கும். மாநிலக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஆறு ஆசிரியர்கள் என மாநிலம் முழுவதும் 192 பேரைத் தேர்ந்தெடுக்கும். இவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விருதும், 10,000 ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்கிறது பள்ளிக்கல்வித் துறை. “ ‘பள்ளி மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. `பள்ளி அளவில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அவசர கதியில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
கடந்த ஆண்டில், `ஒவ்வொரு பள்ளியும் நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்கொண்ட பள்ளியாக மாற்றியமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்திலேயே முடங்கிக்கிடக்கிறது. தற்போது கனவு ஆசிரியர் திட்டத்தில் வந்து நிற்கிறார் அமைச்சர். இந்தத் திட்டத்தையாவது நிறைவேற்றுவாரா எனக் காத்திருக்கிறோம்" என்றனர் ஆசிரியர்கள்