சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண்; விரைவில் முடிவு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, September 14, 2019

சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண்; விரைவில் முடிவு!

சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண்; விரைவில் முடிவு!


சமூக ஊடக கணக்குகளுடன் அதை பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை இணைப்பது பற்றி விரைவில் முடிவெடுக்க வேண்டும், என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக போலிச் செய்திகள், ஆபாச தகவல்கள் மற்றும் படங்கள், தீவிரவாத தகவல்கள் போன்றவை பரப்பப்படுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாகவும், சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான பிரச்சனைகளின் போது சர்ச்சைக்குரிய தகவல்களை யார் அனுப்பியது என்ற விவரத்தை தெரிவிக்கும்படி சமூக ஊடக நிறுவனங்களிடம், காவல்துறை கேட்கின்றனர். ஆனால், தனிநபர் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த விபரங்களை சமூக ஊடக நிறுவனங்கள் வழங்குவது இல்லை..

இதனால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சமூக இணையதளங்களுடன் அவற்றை பயன்படுத்துவோரின் ஆதார் எண்களை இணைக்கக் கோரி தமிழகம் உட்பட பல மாநில அரசுகள், சமூக இணையதள நிறுவனங்கள் மீது உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளன. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இவற்றை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி பேஸ்புக் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவில் 'இந்த வழக்குகளில் பல உயர் நீதிமன்றங்கள் முரண்பாடான கருத்துக்களை தெரிவிக்கின்றன. இதில் ஒருமித்த கருத்து ஏற்பட இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்தால் நன்றாக இருக்கும்,' என குறிப்பிட்டு இருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் நேற்று விசாரித்தனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா வாதிடுகையில், ''உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுவதில் ஆட்சேபனை இல்லை,'' என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முடிவெடுப்பதா அல்லது உயர் நீதிமன்றங்கள் முடிவெடுப்பதா என இப்போது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக விரைவில் முடிவெடுக்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.


Post Top Ad