ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டைக்கு பதிலாக அனைத்துக்கும் ஒரே அடையாள அட்டை - உள்துறை மந்திரி அமித்ஷா யோசனை
ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டைக்கு பதிலாக அனைத்துக்கும் ஒரே அடையாள அட்டை - உள்துறை மந்திரி அமித்ஷா யோசனை.
டெல்லியில் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கமிஷனர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கான அடிக் கல்லை நாட்டினார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
உலக மொத்த மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை 17.5 சதவீதமாக உள்ளது. ஆனால் உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியாவின் நிலப்பரப்பு 2.4 சதவீதம் தான். எனவே மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு குறைவான இயற்கை வளங்களே உள்ளன. இந்த சமமற்ற நிலையை நிறைவு செய்ய நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஆதார், பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அனைத்து பயன் பாடுகளுக்கும் ஒரே அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை நாம் ஏன் கொண்டுவரக் கூடாது? அனைத்து தகவல்களையும் ஒரு அட்டையில் கொண்டுவருவதற்கான திட்டம் தேவை. இது சாத்தியமானதுதான். இதற்கு மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கு விவரம் தயாராக இருப்பது மிகவும் முக்கியம்.
2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி காஷ்மீர் மற்றும் இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநில பனிப்பிர தேசங்களில் 2020-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதியும், நாட்டின் இதர பகுதிகளில் 2021-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதியும் தொடங்கும். மொத்தம் 16 மொழிகளில் ரூ.12 ஆயிரம் கோடி செலவில் இந்த கணக்கெடுப்பு நடக்கிறது.
இந்த கணக்கெடுப்பு பணியில் முதல் முறையாக செல்போன் செயலி (மொபைல் ஆப்) பயன்படுத்தப்படுகிறது. பேனா, பேப்பர் கணக்கெடுப்பு முறையில் இருந்து மின்னணு முறையிலான கணக்கெடுப்புக்கு நாடு முன்னேறுகிறது. நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இது பெரிய புரட்சியாக இருக்கும்.
2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு நாட்டின் எதிர்கால திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும், நலத்திட்டங்களுக்கும் அடிப்படையாக இருக்கும். இந்த முக்கியமான பணி வெற்றிகரமாக நடைபெற மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் இதன் பயன்கள் குறித்து தெரிவிக்கப்படும்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பல பரிணாமங்களில் பயன்படுவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும். இது நகராட்சி வார்டுகள், சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எல்லைகளை திருத்தி அமைக்கவும் உதவும். கணக்கெடுப்பு அதிகாரிகள் உண்மையாக இந்த பணியில் ஈடுபட்டால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய புண்ணியம் அவர்களுக்கு கிடைக்கும்.
தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான (என்.பி.ஆர்.) தகவலும் இந்த கணக்கெடுப்பு பணியின் போதே சேகரிக்கப்படும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையில் ஒரு நபர் இறந்துவிட்டால் தானாகவே திருத்திக்கொள்ளும் வசதியும் சேர்க்கப்படும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
0 Comments:
Post a Comment