கரையவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழகக் குழந்தைகளின் கல்வி உரிமை! தடுத்து மீட்கும் பொறுப்பு, யாருக்கெல்லாம்?*
✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
புதிய கல்விக் கொள்கை வரைவு 2016-க்கு அப்போது எழுந்த எதிர்ப்பையும் மீறி, தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ள வரைவு 2019-ல் உள்ள புதிய அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் தமிழக ஆளும் தரப்பும் அதிகாரப் பொறுப்புகளும் அதிதீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட உரிமைகளை முழுமையாகப் பறித்து, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தைக் குலைத்து, முறையான கட்டமைப்பில் நன்முறையில் இயங்கி வரும் தமிழகப் பள்ளிக் கல்வியைச் சீரழிக்கப் போகும் முன்னோட்டத்தை கல்விக் கொள்கை வரைவு வெளியிட்டுள்ளது.
முன்னோட்டம் மட்டுமே வெளியிடப்பட்டு, வெளியீட்டுத் தேதி உறுதியாகாத நிலையில் அக்காட்சிகளை படிப்படியாகத் திரையிட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அதிகார வர்க்கம். ஆம். தற்போது கல்வித்துறையில் சீரமைப்பு எனும் பேரில் நடைபெறும் அனைத்துச் சீரழிவுகளுக்கும் பின்புலமாக இருப்பது புதிய கல்விக் கொள்கை வரைவு 2019 தான்.
பள்ளி இணைப்பு - பசங்களுக்கு ஆப்பு :
பள்ளிகள் இணைப்பு & வளாகக் கல்வி முறை எனும் பேரில் தொடக்கக் கல்வித் துறைக்கான தன்னாட்சி அதிகாரம் முழுமையாகப் பறிக்கப்பட்டு மேல்நிலைப் பள்ளித் தலைமையில் தனித்த சமஸ்தானங்களாக உருவாக்கப்பட்டுவிட்டன.
இதன் தாக்கம் ஆசிரியர்களின் 'உயர் பதவி' பறிப்பு, அதிகாரக் குவிப்பு என்று வெளிப்படையாகப் பார்க்கப்பட்டாலும், மாணவர்களின் சட்டப்படியான கல்வி உரிமையையும் அவர்களின் கல்வித் தரத்தினையும், வேலைவாய்ப்பினையும் பாதிக்கும் நிலையை நோக்கி நகர்த்தப் போகிறது என்பதே உண்மை.
ஆண்டிற்கு 3 பொதுத்தேர்வுகளுக்கும் (10,11,12), நீட் போன்ற அகில இந்தியத் தேர்வுகளுக்கும் மாணவர்களைத் தயார்படுத்த வேண்டிய நெருக்கடியான சூழலில் உள்ள மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தற்போதைய இணைப்புப் பள்ளி & குறுவள வளாக முறையால் மிகக் கூடுதலான நெருக்கடியை ஏற்படுத்ததுவதோடு அதன் பாதிப்புகள் சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் தான் சென்றடையும் என்பதே கள எதார்த்தம்.
இனி பள்ளி எனில் ஆசிரியர், பதிவேடு, இணையம் தான். மாணவருக்கு இடமேது? :
மாணவர்களின் கல்வித் தரம் ஆசிரியர் மாணவர் இடைவினை அதிகரிப்பால் உருவாகுமே அன்றி ஆசிரியர் பதிவேடு இடைவினை & ஆசிரியர் இணையப் பதிவேற்ற இடைவினை வழியே நிகழப் போவது இல்லை.
ஆனால், மாணவர் கல்வியை மேம்படுத்துகிறேன் என்ற போர்வையில் அளவிற்கு மீறிய தேவையற்ற பதிவேடுகள் பரிமாரிப்பும், ஆசிரியர் மாணவர் வருகை முதல் பாடவேளை செயல்பாடுகள் வரை அனைத்தையும் நாள்தோறும் இணையத்தில் பதிவேற்ற வேண்டுமென்பதும் மாணவர் நலனை முன் வைத்து அல்ல. பள்ளிகள் இணைப்பால் தற்போதைய தலைமையாசிரியர் பதவிகள் பறிக்கப்படுவதால் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரிடம் குவிக்கப்படும் பொறுப்புகளின் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாகவும் தொழில்நுட்ப அணுகுமுறை எனும் பேரில் பொதுமக்களையும் உலக வங்கியையும் ஏமாற்றும் நடவடிக்கையாகவும் தான் இது தோன்றுகிறது.
படகில் துடுப்பிட்டு கரையேற்றும் துடுப்பாளர் எத்தனைமுறை எத்தனை மணிக்கு எப்படித் துடுப்பிட்டார் என்பதை நிகழ்நேரப் பதிவாக இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்பது எத்தகைய அறிவாண்மையோ அத்தகையதே தற்போதைய கல்வித்துறையின் அணுகுமுறை.
மலரக்காத்திருக்கும் மொட்டுகளைச் சருகாக்கும் சட்டங்கள் :
இது ஒருபுறமிருக்க, தற்போது 5 & 8-ஆம் வகுப்பு பிஞ்சுகளுக்கும் பொதுத்தேர்வை இவ்வாண்டே நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டாயிற்று.
கல்வி என்பது பொதுத் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது 'ஓர் உளவியல் சார்ந்த நடத்தை மாற்றத்தை குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நிகழ்த்தக்கூடிய தொடர் ஊக்கி. அனைத்து குழந்தைகளுக்குமான பொதுவான அறிவு வளர்ச்சி என்பதும் வயதைப் பொறுத்து ஒன்றுபோல் இருப்பது அல்ல.' என்பதை எல்லாம் ஆசிரியர் பயிற்சியில் பாடமாகக் கற்பிக்கும் தமிழகக் கல்வித்துறை தான் தற்போது அனைத்து குழந்தைகளையும் 10 வயதிலேயே பொதுத் தேர்வு வைத்து வடிகட்டப்போகிறேன் என அரசாணை வெளியிட்டு, தமது மூளைக்குத் தாமே விடுமுறையளித்துக் கொண்டுள்ளது.
மற்றொருபுறம், அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை நுழைத்து அரசுப் பள்ளிகளை கார்ப்ரேட் நிறுவனமயமாக்கலுக்கான செயல்முறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுவிட்டது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பினையும் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தையும் சிதைக்கும் செயலாகவே இந்நடைமுறைகள் செயலாக்கம் பெற்று வருகின்றன.
இது போன்ற பல அணுகுமுறைகளைத் தொடர்ந்து திணித்து வருவதால் யார் யாருக்கெல்லாம் நன்மை உண்டாகப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். சற்றே வரலாற்றை பின்னோக்கி புரட்டிப்பார்த்தாலே புலப்பட்டுவிடும். காமராசர் காலத்திற்கும் முன்னதாக. . . பிரித்தானியர் வருகைக்கும் முன்தான நிலையை நோக்கி தமிழகக் குழந்தைகளின் கற்றல் வாய்ப்புகள் தேயவைக்கப்பட்டு வருகின்றன.
இதனை உணர்ந்ததால்தான் கல்வி & மாணவர் நலன் பேணும் உண்மையான ஆசிரிய இயக்கங்கள் TNPTF, TNHHSSGTA, TNGTA, TIAS, TNPGTA, STFI, AIFUCTO, JACTTO-GEO என களத்தில் இறங்கி செயலாற்றி வருகின்றன. ஆனால், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை கொள்ள வேண்டிய பெற்றோரோ இதுகுறித்த சிந்தையற்று உள்ளதோடு, இவர்களின் போராட்டங்களை வழக்கமான வன் உணர்வோடே கடந்து செல்கின்றனர்.
முக்கிய அரசியல் கட்சிகளோ தேசிய கல்விக் கொள்கை என்றால் இந்தித் திணிப்பு என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே புரிதலாகக் கொண்டுள்ளன. இந்தித் திணிப்பு என்பதும் ஒரு ஆயுதமே! அத்தோடே அநேக ஆயுதங்களைக் கொண்டு தான் தமிழகக் குழந்தைகள் மீதும், தமிழகக் கல்வி வளர்ச்சி மீதும் தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆசிரிய இயக்கங்கள் களத்தில் இறங்கியிருந்தாலும் அதன் தாக்கத்தை முழுமையாகப் பிரதிபலிக்கவிடாது ஒருவேளை தடுக்கப்படலாம். அசுர பலத்தோடே இருக்கும் அதிகார வர்க்கமும் அதன் அடிமை வர்க்கமும் ஒரு கட்டத்திற்கு மேல் தனது அதிகார வெறிகொண்டே தங்களை வேட்டையாடக் கூடும் என்பதையும் தெரிந்தேதான் தமிழகக் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகக் களத்தில் இறங்கியுள்ளனர்.
ஆகையால், தமிழகக் குழந்தைகளின் கல்வி உரிமையைக் காக்க ஆசிரிய இயக்கங்களைத் தாண்டி பொதுமக்கள் & அரசியல் கட்சிகளின் புரிதலும் பங்களிப்பும் இன்றியமையாத் தேவையாக உள்ளது. இத்தகைய புரிதலுக்கு நேரான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் விதைக்கவே தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி 'கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பரப்புரை இயக்கத்தைத்' தொடங்கி செப்டம்பர் 25 முதல் தமிழகமெங்கும் வாகனப் பரப்புரையில் ஈடுபட உள்ளது.
கல்வி உரிமைப் போரின் முன்னத்தி ஏர்களாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் களமிறங்கிவிட்டனர். இதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது சந்ததியின் கல்வி உரிமைக்காகக் களத்தில் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
0 Comments:
Post a Comment