இடை நிற்றல் மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவு
இடைநிற்றல் மாணவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து பள்ளிக் கல்விக்கான எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப் படிப்பை தொடராமல் இடைநின்ற மாணவர், வயது பூர்த்தியாகியும் பள்ளிக்கு வராதவர் குறித்த விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது. இதையடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களைப் பள்ளியில் சேர்க்கிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தொடக்க கல்வி பயின்று இடையில் நின்ற மாணவர்கள், 14 வயதுக்குட்பட்ட, பள்ளி செல்லாத மாணவர்கள் விவரத்தை தலைமை ஆசிரியர்கள் கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.
பள்ளி விட்டு வேறு பள்ளி சென்ற மாணவர்களின் விவரங்களையும் சேகரித்து புதுப்பிக்க வேண்டும். இந்தப் பணி முடிவடைந்தவுடன் சேகரிக்கப்பட்ட விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.