சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியிடங்களை நிரப்பும் விவகாரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, September 9, 2019

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியிடங்களை நிரப்பும் விவகாரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியிடங்களை நிரப்பும் விவகாரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது நாளிதழ்களில் விளம்பரப்படுத்த தேவையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் உள்ள நிர்மலா அரசு உதவிபெறும் தனியார் பெண்கள் கல்லூரி ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 7 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னர் நாளிதழ்களில் விளம்பரப்படுத்தவில்லை எனக்கூறி கல்வித்துறை அதிகாரிகள் அந்த நியமனங்களுக்கு அனுமதி வழங்க மறுத்து உத்தரவிட்டிருந்தனர். இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஐசக் மோகன்லால், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் தேவையான சட்ட பாதுகாப்புகளை வழங்கியுள்ளது.

இந்த கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை தங்களது விருப்பப்படி நிரப்பிக்கொள்ள கல்லூரி நிர்வாகத்துக்கு முழு உரிமையும், சுதந்திரமும் உள்ளது. எனவே இந்த நிறுவனங்கள் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப வேண்டியதில்லை. எனவே நியமன உத்தரவுக்கு அனுமதி மறுத்து கல்லூரி கல்வி இணை இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டிருந்தார். அப்போது அரசு தரப்பில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்றாலும் முறைப்படி அனுமதி பெற்ற பிறகே அந்த பணியிடங்களை நிரப்ப முடியும் என வாதிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் அண்மையில் பிறப்பித்த உத்தரவில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பும்போது நாளிதழ்களில் விளம்பரப்படுத்த தேவை இல்லை. எனவே இதுகுறித்து கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த நியமனங்களுக்கு அனுமதியளித்து 4 வாரங்களுக்குள் அவர்களுக்கு சேர வேண்டிய ஊதியம் உள்ளிட்ட இதர பணப்பலன்களை வழங்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


Post Top Ad