தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நாளை முதல் அக். 1-ம் தேதி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; பிரதமர் மோடியின் பிளாஸ்டிக் எதிர்ப்பு வேண்டுகோளுக்கு இணங்க, அனைத்து பள்ளிகளுக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு பற்றிய அறிவுரை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நாளை முதல் அக்டோபர் 1ம் தேதி வரை மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும், குறிப்பாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது, பயன்பாட்டில் இருந்து நீக்குவது மற்றும் மறுசுழற்சிக்கு உட்படுத்துவது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படம் எடுத்து அனுப்பவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அப்துல்கலாம் பிறந்தநாளான அக்.15-ம் தேதி இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் - பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-19ஆம் ஆண்டுக்கான கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை குழு அமைத்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழுடன் ரூ.10,000 வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துத்துள்ளது.