மாணவர்களை தொழிற்சாலைகளுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு - செங்கோட்டையன்
இதில் மாவட்ட பால் வளத்தலைவர் காளியப்பன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், கூட்டுறவு சங்கத் தலைவர் காளியப்பன், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, தாலிக்குத் தங்கம், பிறந்த குழந்தைகளுக்கு அம்மா பெட்டகம், கைவிடப்பட்ட குழந்தைகளை காப்பாற்ற தொட்டில் குழந்தை திட்டம் உள்பட பல திட்டங்களை கொண்டு வந்தார். அந்த திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
தற்போது தங்கத்தின் விலை 1 பவுன் ரூ.28 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இருந்த போதிலும் இந்த திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரசு தொலை நோக்கு சிந்தனையோடு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு முதல் இது வரை 18 ஆயிரத்து 783 பேருக்கு ரூ.146 கோடி மதிப்புள்ள தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் 45 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2017-18 மாணவர்களுக்கு விரைவில் மடிகணினி வழங்கப்படும். சிபிஎஸ்இ பாடத்திட்டங்களை மிஞ்சம் வகையில் தமிழ்நாட்டில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.காலத்தைப் பற்றி கவலையில்லை. மாணவ, மாணவிகளை சிறந்த கல்வியாளராக மாற்ற வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. 1,000 ஆங்கில வார்த்தைகள் கொண்ட சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதை விரைவில் முதலமைச்சர் வெளியிட உள்ளார். தொழிற்சாலைகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7 ஆயிரத்து 500 அரசு பள்ளிகளில் இண்டர்நெட், கம்ப்யூட்டர் வசதியடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்படும். அரசு பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் கொண்டு வரப்படும். தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசு பள்ளிகளை உருவாக்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.