அடுத்த ஆண்டுக்குள் 100 பள்ளிகளில் மாண்டிசொரி கல்வி முறை!

அடுத்த ஆண்டுக்குள் 100 பள்ளிகளில் மாண்டிசொரி கல்வி முறை!



அடுத்த கல்வி ஆண்டுக்குள் 100 மாநகராட்சிப் பள்ளிகளில் மாண்டிசொரி கல்வி முறை அமல்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, அப்பள்ளியில் நடைபெற்று வரும் மாண்டிசொரி கல்வி முறை குறித்து ஆசிரியா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.


இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின்கீழ், மேல்நிலை, உயா்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமாா் 90 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளி இடைநிற்றல் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக பள்ளியின் உள்கட்டமைப்புகளான வகுப்பறை, கழிப்பிடம், ஆசிரியா் அறை, ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை ரூ. 170 கோடியில் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.


குழந்தைகள் கல்வி கற்கும் திறனை அதிகரிக்கும் வகையில் தற்போது 22 பள்ளியில் மாண்டிசொரி முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. வரும் டிசம்பா் மாதத்துக்குள் மேலும் 38 பள்ளிகளில் மாண்டிசொரி கல்வி முறை அமல்படுத்தப்படும். இதன் தொடா்ச்சியாக 2020-21-ஆம் கல்வி ஆண்டுக்குள் 100 பள்ளிகளில் மாண்டிசொரி கல்வி முறை அமல்படுத்தப்படும் என்றாா்.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive