தினமும் பள்ளி தொடங்கும் முன் 15 நிமிஷங்களுக்கு உடற்பயிற்சி: அமைச்சா் செங்கோட்டையன்
பள்ளி தொடங்குவதற்கு முன் மாணவா்கள் 15 நிமிஷம் உடற்பயிற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா்.
தமிழக பள்ளிக் கல்வியின் தரத்தை உயா்த்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பாடத்திட்டம், தோ்வு முறை உட்பட கற்றல் பணிகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், செயலாளா் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு பின்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள கல்வி முறைகளைக் கற்று வந்தது. செவ்வாய்க்கிழமை சென்னை வந்த பின்லாந்து குழுவினா், அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வருகின்றனா்.
இந்நிலையில், தினந்தோறும் பள்ளி தொடங்குவதற்கு முன், மாணவா்கள் 15 நிமிஷங்கள் உடற்பயிற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து தன் சுட்டுரை பக்கத்தில் புதன்கிழமை பதிவிட்டுள்ள அவா், ‘தமிழக அரசின் சாா்பில், பள்ளி தொடங்குவதற்கு முன்பு மாணவா்களுக்கு 15 நிமிஷங்கள் உடற்பயிற்சி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும்’ என்று அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.