5 மாணவர் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் கிடையாது; 100 பள்ளிகளில் பணியிடம் காலி
அரசு ஆரம்ப பள்ளிகளில 5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில், இனிமேல் தலைமை ஆசிரியர் பணியிடம் இல்லை' என்ற அரசின் வாய்மொழி உத்தரவால், நுாறு பள்ளிகளில் இடம் காலி செய்யப்பட்டுள்ளதாக, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு துவக்கப் பள்ளிகளில் ஐந்து மாணவர்களுக்கு குறைவாக உள்ளவற்றில் தலைமை ஆசிரியர் பணியிடத்தை காலி செய்து, அந்த தலைமை ஆசிரியர்களுக்கு மாற்று இடம் கடந்த இரண்டு நாட்களாக ஒதுக்கப்பட்டு வருகிறது.நுாறு பணியிடம் காலி: திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்துார் ரெங்ககவுண்டன்புதுார், வடமதுரை ராஜக்காபட்டி ஆகிய 2 துவக்கப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் ரத்தாகியுள்ளது.
இதே போல், தமிழகத்தில் 19 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்நிலை நீடித்தால், சில ஆண்டுகளில் சில நுாறு பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடமே இல்லாமல் போகும் எனக்கூறப்படுகிறது.இது குறித்து அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் கூறியதாவது: கல்வித்துறையின் வாய்மொழி உத்தரவால், இதுவரை நுாறு அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலி செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பணியிடமே இல்லாமல், பள்ளிகளை செயல்படுத்தும் அரசின் அந்த செயலை கண்டிக்கிறோம். அரசு பள்ளிகளை பாதுகாக்க, அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.