5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் :
வெப்ப சலனம் காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தேனி, திருச்சி, கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைப்பொழிவு உள்ள நிலையில் வருகிற 27-ந்தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும், அடுத்தவார இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 5 செ.மீ. மழையும், நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 4 செ.மீ. மழையும், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.