மின்னஞ்சல் மூலம் விடுப்புக் கோரும் அரசுப்பள்ளி மாணவர்கள்!
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் வல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் தம் வகுப்பு ஆங்கில ஆசிரியைக்கு தம் விடுப்புக் கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்து வியப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியை ஜோ.அமுதா அவர்களிடம் கேட்டபோது, "எட்டாம் வகுப்பு ஆங்கில பாடம் இரண்டாம் பருவத்தில் மாணவர் கற்றல் செயல்பாடுகளில் ஒன்றாக இதுவரையிலும் இல்லாத வகையில் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய பாடப்புத்தகத்தில் மின்னஞ்சல் மூலமாக கடிதம் எழுதும் முறை பற்றி மாணவர்களுக்கு விளக்கி மாதிரி கடிதமும் தரப்பட்டிருந்தது. இதனை சோதனை முறையில் மாணவர்களின் பெற்றோரது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்திப் பிறருக்கு மின்னஞ்சல் எழுதுவது எவ்வாறு என்பதை விளக்கிக்கூறிச் செய்து காட்டியதை மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.
அதன்பின், அவர்கள் தாம் எடுக்கும் விடுப்பை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து ஆச்சர்யத்தைத் தொடர்ந்து ஆழ்த்தி வருவது மகிழ்ச்சியாக உள்ளது" என்று நெகிழ்ந்து பேசினார். மேலும், சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரிடம் இதுபற்றி கேட்டபோது அவர்கள் மின்னஞ்சலில் எழுதுவது புதிய அனுபவத்தையும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருவதாக ஆனந்தம் பொங்க கூறியதோடு மட்டுமல்லாமல் பாடநூலில் தரப்பட்ட மாதிரி மின்னஞ்சல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் கூகுள் நிறுவன இயக்குநர் திருமிகு சுந்தர் பிச்சை அவர்களுக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளதாகத் தெரிவித்து நம்மை வியப்பில் ஆழ்த்தினர். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொண்டு செயல்படும் ஆசிரியை அமுதா அவர்களுக்கும் அவருடைய இருபத்தோறாம் நூற்றாண்டின் இணையற்ற மாணவ மாணவியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பது நம் கடமையன்றோ?