பத்திரிகை வடிவமைத்த எட்டாம் பத்திரிகை வடிவமைத்த எட்டாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேரில் அழைத்துப் பாராட்டு.
புதுக்கோட்டை, நவ .29:
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலெட்சுமி, அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் இயல் என்ற மாணவி நல்ல பத்திரிக்கை இதழ் வடிவமைத்திருந்தமைக்காக நேரில் அழைத்துப் பாராட்டினார்.
நாம் அன்றாடம் வாசிக்கும் செய்தித்தாளின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருப்போம். நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள எத்தனை செய்தி வடிவங்கள் வந்திருந்தாலும் இன்றைக்கும் நாளிதழ் வந்தவுடன் ஆர்வமாக ஓடிச் சென்று செய்தித்தாளை வாங்கிப் படிப்பதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி அனைவரும் ஆர்வம் காட்டினாலும் செய்தித்துறையில் பணி புரிபவர்கள் மிகச் சொற்பம்தான். குறிப்பாக செய்தித்துறையில் செய்தியாளராகப் பணி புரிவதற்கு உயர்ந்த பட்சத் தகுதி, குறைந்த பட்சத் தகுதி என்றெல்லாம் இருந்தாலும் அத்துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு லட்சியத்தோடு பத்திரிகைத்துறையில் பலரும் பணி புரிந்து வருவதைக் காணலாம்.
மிகக் குறைந்த வயதில், பள்ளிக் காலத்தில், கல்லூரிக் காலத்தில் என கவிதைகள், கட்டுரைகள், கதைகள், சிறுகதைகள் என்று எழுதிப் பிரபலமடைந்த தலைவர்கள் உண்டு. பத்திரிகை ஆசிரியர்கள் ஆன வரலாறுகள் உண்டு.
அதே போல் அரசியலில் கோலோச்சினாலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் போன்ற தலைவர்கள் எல்லாம் எழுத்துத்துறையிலும் கோலோச்சியவர்கள் ஆவர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், திருக்கட்டளை என்ற கிராமத்தில் ஈட்டித்தெரு என்று சிறிய பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவி இயல் என்பவர் பள்ளிப் படிப்புடன் கணினிக் கல்வி கற்றுக் கொண்டதன் விளைவாக தானே ஒரு பத்திரிகையை வடிவமைத்ததோடு அதற்கு நல்ல பத்திரிகை என்று பெயரும் சூட்டி இரண்டாவது இதழாக வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன், பள்ளியின் தலைமையாசிரியர், ஆகியோரையும் மாணவி இயலையும் அழைத்து பத்திரிகையின் ஆர்வம் குறித்தும் அந்தப் பத்திரிகையில் வந்த செய்திகளையும் கேட்டறிந்தார்.
அப்போது இயல் கூறியதாவது.. எங்களது வீட்டில் கணினி இருக்கிறது. அதில் சிறு வயது முதலே தமிழ், ஆங்கில எழுத்துகளைத் தட்டச்சு செய்யப் பழகி வந்தேன். அதனால் இரு மொழிகளிலும் தட்டச்சு செய்வது எளிமையாகப் பழகி விட்டேன். வடிவமைப்பது குறித்து என் தந்தை எப்போதாவது பத்திரிகைச் செய்திகள் வடிவமைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.
அதன் விளைவாக நான் ஏழாவது படித்து எட்டாம் வகுப்புக்கு வரும்போது கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை வந்தபோது வடிவமைக்கக் கற்றுக் கொண்டேன். அதே போல் பள்ளிப் பாடங்களில் எழுத்து பிழையில்லாமல் எழுதவும் படிக்கவும் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்திருந்ததால் செய்தி வடிவமைப்பில் எழுத்துப் பிழைகள் வராமல் பார்த்துக் கொண்டேன்.
மேலும் அன்றாடம் வரும் மற்ற பத்திரிகைகளில் இருந்து நம் பத்திரிகையை வேறு படுத்தி வடிவமைக்க வேண்டும் என்பதற்காக படங்கள் வடிவமைப்பதில் மாற்றங்கள் செய்தேன். மேலும் செய்திக்கான புகைப்படங்கள் எடுக்கவும் ஈ மெயில், வலைதளங்களில் இருந்து தரவிறக்கம் செய்து அவற்றைச் செய்தியாக மாற்றுவது, நடந்த சம்பவங்களை வைத்து அதைச் செய்தியாக உருவாக்குவது என அனைத்தையும் கற்றுக் கொண்டு அவற்றை இந்த பத்திரிகையில் புகுத்தி வடிவமைத்திருக்கிறேன்.
மேலும் பத்திரிகை வடிவமைப்பது காலத்திற்குக் காலம் மாறு பட்டு வந்திருக்கிறது. அதைப் பற்றியும் கடந்த காலங்களில் அறிந்து கொண்டேன். இப்போதைக்கு லேட்டஸ்ட் டெக்னாலஜி என்னவென்பதை அறிந்து அதற்கேற்ப இப்போதைக்கு காலடி எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் நிறைய டெக்னாலஜிகள் புதிது புதிதாக வரும்போது என்னையும் அப்டேட் செய்து கொண்டு அதற்கேற்ப இந்த நல்ல பத்திரிகையை பெயருக்கேற்ப நல்ல பத்திரிகையாக வளர்த்தெடுப்பேன்.
முதல் இதழ் கடந்த ஜூலை மாதம் நாளிதழ் அளவிற்கு இரண்டு பக்கங்களை வடிவமைத்து கொஞ்சம் பிரிண்டுகள் மட்டும் எடுத்தேன். அது செலவு அதிகம் ஆகும் என்று அறிந்ததால் கொஞ்சம்தான் எடுக்க முடிந்தது.
அதன்பிறகு பள்ளிக் கல்வி, பாடச்சுமை, இடையிடையே பல போட்டித் தேர்வுகள், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள், கண்காட்சிப் போட்டிகள் என கலந்து கொண்டதன் விளைவாக இதழ்ப்பணி கொஞ்சம் தொய்வடைந்திருந்தது. ஆனாலும் செய்திகள் சேகரிப்பது பாதுகாப்பது என வைத்திருந்தேன்.
இரண்டாவது இதழான இந்த இதழை வடிவத்தைக் குறைத்து டேப்லாய்டு என்ற அளவில் வடிவமைத்தேன். இன்றைக்கும் பிரபலமான நாளிதழ்கள் இலவச இணைப்பாக அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்து வடிவமைத்து வெளியிடுவதால் நானும் அதையே செய்தேன். எட்டுப் பக்க அளவில் வடிவமைத்து பிரிண்ட் செய்தேன். அது அனைத்து வகையிலும் சற்று எளிமையாக இருந்தது. பெரியவர்களுக்குப் பெரிய இதழ்கள், சின்னவளான எனக்கு சிறிய இதழ் போதும்.
இப்போதைக்கு கல்வி கற்கும் காலம் ஆதலால் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வடிவமைத்திருக்கிறேன். வரும் காலத்தில் பெரிய பத்திரிகையாளராக ஆக வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதற்கும் கல்வி கற்றுத்தானே ஆக வேண்டும். இதுவரை கற்றுக் கொண்டதை பத்திரிகை ஆக்கியிருக்கிறேன். எனது இந்த ஆர்வத்திற்கு என் பெற்றோர் மட்டுமள்ள என்னை உருவாக்கிய ஆசிரியர்கள், ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து வரும் ஆன்றோர் சான்றோர்களும் காரணம் ஆவர்.
புத்திரிகையாளர் ஆவது மட்டும் எனது நோக்கமல்ல, பள்ளிப் பருவத்தில் பள்ளிப் பாடங்களைத் தவிர இன்னும் ஏராளம் கற்றுக் கொள்ள வேண்டியது உள்ளது. அதற்காக வாட்ச்அப், பேஸ்புக் மட்டுமல்ல செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த இதழைத் தொடங்கியிருக்கிறேன் என்றார்.
மேலும் கூறுகையில் செய்தியாளராக இருக்க வேண்டும் என்றால் மற்றவர்கள் சொல்கிற மாதிரி டிவி பார்க்கக் கூடாது வாட்ச்அப் பார்க்கக் கூடாது என்பதாக இருக்கக் கூடாது. அனைத்தையும் நான் பார்க்கிறேன். அனைத்திலிருந்தும் நல்லவற்றைக் கற்றுக் கொள்கிறேன். நான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க இருக்கிறேன் என்று உறுதிபடக் கூறுகிறார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலெட்சுமி மாணவ, மாணவியர் பலதுறைகளிலும் முன்னேறி வந்திருக்கிறார்கள். ஆனால் எட்டாம் வகுப்பு பயிலும் காலத்திலேயே பத்திரிகைத் துறையில் இவ்வளவு ஆர்வம் கொண்டுள்ள மாணவியை மனதாரப் பாராட்டுகிறேன் என்று வாழ்த்தி சால்வை அணிவித்தார்.
அவருடன் வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன், பள்ளியின் தலைமையாசிரியர் கோவிந்தம்மாள், உருவம்பட்டி பள்ளி ஆசிரியர் முனியசாமி ஆகியோர் இருந்தனர்.