பிட் இந்தியா' - பள்ளிகளுக்கு பரிசு வழங்கும் போட்டி அறிவிப்பு.
பிட் இந்தியா' செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு, பரிசு வழங்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில், 'பிட் இந்தியா' இயக்கம், கல்வி நிறுவனங்களில் துவக்கப்பட்டு உள்ளது. உடற்பயிற்சிகள் செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில், இரண்டுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் நடக்கும் வகையில், பள்ளி மைதானம் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் தினமும், விளையாட்டு, யோகா, இசை ஆகியவற்றில், ஏதாவது ஒன்று நடத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம், ஒரு மணி நேரமாவது, மாணவர்கள் விளையாட வேண்டும்.
இதுபோன்ற வசதிகள் மற்றும் செயல்பாடுகள் உள்ள பள்ளிகள், பிட் இந்தியா போட்டியில் பங்கேற்கலாம். இதற்காக, தங்களின் உடற்கல்வி பயிற்சி விபரங்களுடன், வரும், 31ம் தேதிக்குள், www.fitindia.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.