"காபி வித் கமிஷனர்" - Ias அதிகாரிகளை சந்தித்த அரசுப்பள்ளி மாணவர்கள்
காபி வித் கமிஷனர் என்ற பெயரில் மாநகராட்சி ஆணையருடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி மாதம் ஒருமுறை நடத்தப்படும் என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார், சென்னை ரிப்பன் மாளிகையில், ‘காபி வித் கமிஷனர்’ என்ற பெயரில் பள்ளி மாணவர்களுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. கல்வித்துறை துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், பணிகள் துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன், மாநகர கல்வி அலுவலர் பாரதிதாசன், உதவி கல்வி அலுவலர் முனியன் கலந்துகொண்டனர்.
மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆணையரிடம் உரையாடினர். அப்போது ஒரு மாணவி, “நாங்கள் அரசு பள்ளி மாணவர்களாக இருப்பதால் அரசு பஸ்சில் எங்களை ஏற்ற மறுக்கின்றனர். பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றனர்” என்றார்.
ஆணையர் பிரகாஷ், “நீங்கள் அரசு பள்ளியில் படிப்பதை தாழ்வாக கருதவேண்டாம். பல்வேறு உயர் பதவிகளில் இருப்பவர்கள் அரசு பள்ளியில்தான் படித்துள்ளனர். எனவே, அதுபற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படும்” என்றார்.
மற்றொரு மாணவர்: எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. ஆணையர், “ உங்கள் பள்ளியில் இருக்கும் இடத்தில் விளையாட்டு வசதி செய்து தரப்படும். மாணவர்: ‘ஐஏஎஸ் ஆக என்ன செய்ய வேண்டும்’. ஆணையர்: ‘ஐஏஎஸ் படிப்பது கஷ்டமானது அல்ல, இந்தியாவில் உள்ள 80 சதவீதம் ஐஏஎஸ் அதிகாரிகள் பின்தங்கிய வகுப்பில் இருந்து படித்து வந்தவர்கள் தான். எனவே நன்றாக படித்தால் ஐஏஎஸ் ஆகமுடியும்’.
தொடர்ந்து, பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்த, மாணவர்களின் சேர்க்கையை உயர்த்த பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொழில்நுட்பம் சார்ந்த, திறன் மேம்பாடு போன்ற செயல்கள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மியாவாக்கி முறையில் காடுகள் அமைக்க 30 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக இதன் பணிகள் துவங்கப்படும்.
மழைக்காலத்திற்காக போடப்பட்ட சாலை அமைப்பதற்கும், பல்வேறு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தரமானதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் சென்னை மழை பெய்த பொழுது வெள்ளம் போன்ற பாதிப்புகளில் சிக்கியிருக்கும். ஊழல் என்பது தவறான குற்றச்சாட்டு. இவ்வாறு அவர் கூறினார்.