கரூரில் தமிழ்நாடு டிஜிட்டல் டீம் மாநில அளவில் முதல்முறையாக 100 ஆசிரியர்களுக்கு அடோப் எஜூகேஷன் விடுமுறைக்காலப் பயிற்சி!
இன்று 18.01.2020 அன்று தமிழ்நாடு டிஜிட்டல் டீம் கரூர் மாவட்டக்கிளை சார்பில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாநில முழுவதிலுமுள்ள சுமார் 100 தன்னார்வ தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான தமிழ்நாட்டில் முதல்முறையாக அடோப் எஜூகேஷன் (Adobe Education) பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு நடப்புக் கல்வியாண்டில் தேசிய நல்லாசிரியர் விருதாளர் திரு.செல்வக்கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு டிஜிட்டல் டீம் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரும் அடோப் எஜூகேஷன் தேசிய விருதாளருமான திரு.S.மனோகர் மற்றுமொரு ஒருங்கிணைப்பாளராக
திருமதி.S.திலகவதி ஆகியோர் முன்னிலையில் பயிற்சியானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பயிற்சியின் கருத்தாளராக இருந்த
கோவை போதிமரம் குழு திரு. ஸ்ரீ காந்த் மற்றும் தேனி மாவட்ட தமிழ்நாடு டிஜிட்டல் டீம் ஒருங்கிணைப்பாளர் திரு காளிதாஸ் இருவரும் அடோப் போட்டோஷாப் குறித்தும் அடோப் எஜூகேஷன் தேசிய விருதாளர் திரு.வெங்கடேசன் மற்றும் திரு.ராஜேந்திரன் ஆகியோர் அடோப் பிரீமியர் பற்றியும் ஆசிரியர்கள் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் காணொலி காட்சி வழியாகச் செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், கருத்தாளர் S. மனோகருடன் இணைந்து மைக்ரோசாப்ட் சார்பில் சிட்னி செல்லவிருக்கும் சேலம் இளவரசன் இருவரும் அடோப் மற்றும் மைக்ரோசாப்ட் எஜூகேஷன் குறித்து அழகாக தம் அனுபவங்களைப் பகிர்ந்து இருபால் ஆசிரியப் பெருமக்களை ஊக்கமூட்டினர்.
இறுதியாக NCERT தேசிய விருதாளர் ஜாவா சாமினாதன் (எ) ஜவஹர் அவர்கள் தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆசிரியர்களுக்கான செயல் ஆராய்ச்சி வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து எடுத்துரைத்தார். தமிழ்நாடு டிஜிட்டல் டீம் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.இரமேஷ் அவர்களின் சீரிய ஒருங்கிணைப்பிலும் சரியான திட்டமிடலிலும் பயிற்சி இனிதே நடைபெற்றது. பயிற்சியில் விடுமுறைக்கு விடுப்புகள் கொடுத்து ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இனிய தேநீர் இருவேளையும் சுவையான உணவும் வழங்கப்பட்டன. முடிவில் அனைவருக்கும் நல்ல தரமான பயிற்சி நிறைவுச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டது.