200 அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் எப்போது?
தமிழகத்தில், 3,121 அரசு பள்ளிகள், 603 அரசு உதவி பெறும் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக செயல்படுகின்றன.மேலும், 3,051 அரசு பள்ளிகளும், 1,216 அரசு உதவி பள்ளிகளும், மேல்நிலை பள்ளிகளாக செயல்படுகின்றன. இவற்றில், 39 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.மாணவர்களுக்கான திட்டங்களை மேற்கொள்ளவும், வகுப்புகளை நிர்வகிக்கவும், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப் படுகின்றனர்.
தேர்வு நடைமுறைகள், தேர்வு பணிக்கு ஆசிரியர்களை நியமித்தல், மாணவர் விபரங்களை பதிவு செய்தல், மாணவர்களைதேர்வுக்கு அனுமதித்தல் போன்ற பணிகளை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.
நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான பணிகள், தீவிரம் அடைந்துள்ளன.இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில்,பல தலைமை ஆசிரியர் பணியிடங்கள், நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்தப் பள்ளிகளில், நிர்வாகப் பணிகளை சுழற்சி முறையில்,ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாற்றி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதனால், தேர்வு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. எனவே, பொது தேர்வுக்கான பணிகள் பாதிக்கப்படாமலும், பள்ளிகளின் நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படாமலும் தடுக்க வேண்டிய நிலை, பள்ளிக்கல்வி துறைக்கு ஏற்பட்டுள்ளது.
'தலைமை ஆசிரியர் பதவிக்கான காலியிடங்களை, விரைந்து நிரப்பினால் மட்டுமே, இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மாணவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.