இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு 5, 8ம் வகுப்பு மாணவர்கள் இனிமேல் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 17, 2020

இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு 5, 8ம் வகுப்பு மாணவர்கள் இனிமேல் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது

இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு 5, 8ம் வகுப்பு மாணவர்கள் இனிமேல் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது
திருவண்ணாமலை: தமிழகத்தில் முதன்முறையாக இந்த கல்வி ஆண்டில், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபோன்ற தேர்வு முறையால், மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படும் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பொதுத்தேர்வு நடத்தும் முடிவில் இருந்து பள்ளிக் கல்வித்துறை பின்வாங்கவில்லை. திட்டமிட்டபடி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளன. அதில், பொதுத்தேர்வு நடைபெறும் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.




மேலும், முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதும் 5ம், 8ம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது. 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 கிமீ தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பட்டியல், தற்போது மாநிலம் முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், எந்தெந்த மையங்களில் எந்தெந்த பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர், தேர்வு மைய பொறுப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் ஆகியோரின் விபரங்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, வினாத்தாள் அச்சிடப்பட உள்ளன. அவ்வாறு அச்சிடப்படும் வினாத்தாள்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பவும். அங்கிருந்து குறுவள மையம் (சிஆர்சி) அமைந்துள்ள பள்ளிகளுக்கு அனுப்பவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணி சம்பந்தப்பட்ட குறுவள மைய அளவில் நடைபெறும் எனவும், விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை, தங்களுடைய சொந்த பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்காமல், வேறொரு பள்ளியில் தேர்வு எழுத வைப்பது பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல்கள் உருவாகும் என கல்வியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.



பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் பெரும்பாலான பள்ளி மாணவர்கள், தங்களுடைய சொந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதுகின்றனர். ஆனால், முதன்முறையாக தேர்வு எழுதும் 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு இடம்மாற்ற தேர்வு எழுத வைப்பது சரியல்ல என்று ஆதங்கப்படுகின்றனர். தற்போது நடத்தப்படும் பொதுத் தேர்வின் மூலம், தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படுவதில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தாலும், மாணவர்களுக்கு இந்த புதிய நடைமுறை, கல்வி மீதான அச்சத்தை அதிகரித்து, பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Post Top Ad