5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு : நல்லாசிரியர் விருதை திருப்பி அளிக்க முயன்ற ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்!
இதனால், இடைநிற்றல் அதிகரிக்கும் எனவும், குழந்தை தொழிலாளர்கள் நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லிமுத்து என்பவர் கடந்த 2012 - 2013ம் ஆண்டில் வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கினார். அப்போது, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதைக் கைவிட வேண்டும் எனவும், தேர்வு நடத்தப்பட்டால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியும், மனவளர்ச்சியும் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பின்னர் தமிழக அரசு தனக்கு வழங்கிய நல்லாசிரியர் விருது மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முயன்றார். ஆனால், தலைமை ஆசிரியர் அல்லிமுத்துவின் கோரிக்கையை தமிழக அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும், நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைக்காமல் எடுத்துச் செல்லுமாறும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இதனால் தமிழக அரசு தனது கோரிக்கையை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றவில்லை என்றால் தனக்கு வழங்கிய விருதை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்புவேன் என தலைமை ஆசிரியர் அல்லிமுத்து தெரிவித்துள்ளார்.