நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!!
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நமக்கு கற்பித்த/கற்பிக்கும் ஆசிரியரை வைத்து போற்றி வருகிறோம். குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், ஆசிரியர்களின் மன அழுத்தம் மாணவர்களிடையே பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கற்பித்தல் திறமையை பல ஆசிரியர்கள் மிகவும் எளிதாக புகுத்தி விடுகின்றனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மற்ற பணிகளைப் போன்று ஆசிரியப் பணியிலும் வேலைப்பளு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களாலும் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் மிசவுரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆசிரியர்களிடம் மன அழுத்தம் அதிகரிப்பதும், அது மாணவர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தங்களது பணிகளில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். அதனை அவர்கள் சமாளிக்க முடியாததால் மன அழுத்தமாக மாறி சில நேரங்களில் அவற்றை மாணவர்களிடையே வெளிப்படுத்துகின்றனர். சில நேரங்களில் நேர்மறையான மன அழுத்தமாகவும் இருப்பதாக கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, மாணவர்களின் தேர்வு வெற்றி குறித்து ஆசிரியர்கள் சிந்திப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ஜர்னல் ஆஃப் ஸ்கூல் சைக்காலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில் மிட்வெஸ்டில் உள்ள ஒன்பது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து ஆராய்ச்சிக்குழு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் மன அழுத்தம் மற்றும் சமாளித்தல், மாணவர்களின் கவனச் சிதறல், சமூக சிக்கல்கள், மாணவர்களின் விஷயத்தில் பெற்றோர்களின் ஈடுபாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பல்வேறு விதமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மன அழுத்தம் மிக முக்கியமானதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளில் மட்டும் வேறுபடுகின்றனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 66 சதவிகிதம் பேர், அதிக மன அழுத்ததையும், அதிக சமாளிப்பையும், அதேபோன்று 28 சதவிகிதம் பேர் அதிக மன அழுத்தத்தையும், குறைந்த சமாளிப்பையும் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் ஆறு சதவிகிதம் பேர் மட்டுமே குறைந்த அளவு மன அழுத்தத்தை கொண்டுள்ளனர்.
எனவே, அந்தந்த மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர்களின் இந்த நிலைமை குறித்து ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். உடனடியாக ஆராய்ந்து அதனை சரி செய்யும் பட்சத்தில் ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கலாம்.