மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. மருத்துவபடிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்தது.கடந்த 2010-ம் ஆண்டில் மத்திய அரசு அமல்படுத்திய நீட் தேர்வு சட்டத்துக்கு எதிராக வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி (சி.எம்.சி.) உள்ளிட்டோர் கடந்த 2016-ல் தாக்கல் செய்யப்பட்ட மனுக் கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
வேலூர் சி.எம்.சி. தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், அரசியல் சாசன சட்டப்படி சிறுபான்மை நிறுவனமான கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி தாங்களே தனியாக நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், நீட் சட்டம் மூலம் பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்க்கை அளிக்க முடியவில்லை என்றும், எனவே சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், “நீட் சட்டம் மற்றும் அதை கட்டாயமாக்கி கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை ஆகியவை அரசியல் சட்டத்துக்கு எதிரானது.
தமிழ்நாடு அரசு 2006-ம் ஆண்டில் பொது நுழைவுத்தேர்வு மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்து சட்டம் இயற்றியது. நீட் சட்டம் இதற்கு நேர்மாறாக உள்ளது.நீட் தேர்வை கட்டாயமாக்கும் மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக ஏற்கனவே தமிழக அரசு மனு தாக்கல்செய்துள்ளது” என்று கூறப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும், அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு நாம் கட்டுப்பட்டவர்கள் என்றும், ஒவ்வொரு நாளும் நாம் சட்டத்தை மாற்றிக்கொண்டே இருந்தால் அரசு எந்திரம் பாதிப்பு அடையும் என்றும் கூறினார்கள்.அத்துடன் இந்த வழக்கில் தாங்கள் சிறுபான்மையினர் உரிமை குறித்து மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப் போவதாக கூறி, விசாரணையை இன்றைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்தனர்.