இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள் 'ஸ்டிரைக்'
ஊதிய உயர்வு உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், 10 லட்சம் பேர், இன்றும்,நாளையும்(ஜன.,31, மற்றும் பிப்.,1) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக, 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 56 லட்சம் காசோலைகளின் பரிவர்த்தனைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உட்பட பல்வேறு வங்கி சங்கங்கள் பங்கேற்கின்றன.
இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: இந்திய வங்கிகள் சங்கத்துடன், நேற்று நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. இதனால், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். இதில், 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதன் காரணமாக, சென்னையில் உள்ள காசோலை பரிவர்த்தனை மையத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 16 லட்சம் காசோலைகள் தேங்கும்.
அதே போல, மும்பை மையத்தில், 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 26 லட்சம் காசோலைகள்; டில்லி மையத்தில், 12ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 14 லட்சம் காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கும்.நாடு முழுவதும், மொத்தம், 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 56 லட்சம் காசோலை பரிவர்த்தனைகள் முடங்கும். இவ்வாறு, அவர்கள் கூறினார்.