ஆசியர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு? மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்பு
ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மதரசா பணியாளர் தேர்வாணையத்திற்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
மேற்குவங்கத்தில், மதரசா எனப்படும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில், ஆசிரியர்களை நியமிக்க, 2008ம் ஆண்டில்,மாநில அரசால், மதரசா பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனுக்கு எதிராக, மதரசா பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, கோல்கட்டா உயர் நீதிமன்றம்,'2008ம் ஆண்டின், மதரசா பணியாளர் தேர்வாணைய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது'என, 2015ல் தீர்ப்பளித்தது.இதையடுத்து, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தேர்வாணையத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிலர், உச்ச நீதிமன்றத்தில், முறையிட்டனர். அந்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்றம், ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை, ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக்கூடாது என, உத்தரவு பிறப்பித்தது.இந்த வழக்கில், ஜனவரி, 6ம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், 2008ம் ஆண்டின்மதரசா பணியாளர் தேர்வாணைய சட்டம், அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும், அதன்படி செய்யப்பட்ட ஆசிரியர்கள் நியமனங்கள் செல்லும் என்றும் தீர்ப்பளித்தது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மதரசா கல்வி நிறுவனமான 'கோண்டாய் ரஹமானியா ஹை மதரசா' நிறுவனம்,நேற்று மேல்முறையீடு செய்தது.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் அடங்கிய அமர்வு, மேற்கு வங்க மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், பதிலளிக்குமாறு, 'நோட்டீஸ்' அனுப்பியது.