எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின் திறனை வளர்க்க அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின் திறனை வளர்க்க அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிமதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் முகமூடி அணிந்து நடித்துக் காட்டும் ஆசிரியர்கள் .
மதுரை
எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின் திறனை வளர்க்க மதுரையில் அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள 63 அரசு நடுநிலைப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் (எல்கேஜி, யூகேஜி) தொடங்கப்பட்டுள்ளன. இங்கு ஆரம்பத்தில் 630 மாணவர்கள் படித்தனர்.மழலையர் வகுப்பு தொடங்கிய பின்னர் தற்போது 850 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
மழலையர் வகுப்பு குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கான மேம்பாட்டுப் பயிற்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் நடத்தப்படும் இந்த 2-வதுகட்ட மேம்பாட்டுப் பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவக்குமார், கருத்தாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். 3 முதல் 5 வயதுள்ள குழந்தைகளை முன்னேற்றும் வகையில் உடலியக்கப் பயிற்சி, தசை பயிற்சி, மனவளர்ச்சி பயிற்சி, மூளை வளர்ச்சி பயிற்சி அளிக்கப்பட்டது.
குழந்தைகளை ஈர்க்கும் வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மூலம் கற்பித்தல் முறைகள், விலங்குகளின் முகமூடிகளை அணிந்து அறிமுகப்படுத்துதல், மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்த்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மொத்தம் 63 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.