பொதுத் தேர்வுகளை முன்னிட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி: சிபிஎஸ்இ.
சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவதை முன்னிட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகின்றன. 10-ம் வகுப்புக்கு மார்ச் 20-ம் தேதி வரையும் 12-ம் வகுப்புக்கு மார்ச் 30 வரையும் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 7-ம் தேதி வரை இவை நடைபெறும்.
இந்நிலையில் பொதுத் தேர்வுகளை சீரிய முறையில் நடத்த, பள்ளி முதல்வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புத்தாக்கப் பயிற்சிகளை சிபிஎஸ்இ வழங்கியது.
முறையாக தேர்வுகளை நடத்தி, சரியான நேரத்தில், தவறுகள் இல்லாத வகையில் தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர், துணை முதல்வர், போதிய தேர்வுத் துறை அனுபவம் வாய்ந்த மூத்த ஆசிரியர்களுக்கு இந்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக 13,379 பேருக்கு 77 பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன.
இதற்கிடையே தேர்வு நடைபெறும் தினங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவற்றின் மூலம் பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி நிர்வாகம் குழப்பத்துக்கு ஆளாக வேண்டாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.