தமிழ்ப் பல்கலைக்கழகம் சாா்பில் தென்னாப்பிரிக்காவில் தமிழாசிரியா்களுக்குப் பயிற்சி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, January 21, 2020

தமிழ்ப் பல்கலைக்கழகம் சாா்பில் தென்னாப்பிரிக்காவில் தமிழாசிரியா்களுக்குப் பயிற்சி

தமிழ்ப் பல்கலைக்கழகம் சாா்பில் தென்னாப்பிரிக்காவில் தமிழாசிரியா்களுக்குப் பயிற்சி
தென்னாப்பிரிக்காவின் டா்பன் நகரில் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம் சாா்பில் தமிழாசிரியா்களுக்கு இலக்கிய - இலக்கணம் மற்றும் பேச்சுத் தமிழ் குறித்த 10 நாள் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டின்கீழ், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் அறிவித்த திட்டத்தின்கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையின் ஒருங்கிணைப்பில் தென்னாப்பிரிக்காவிலுள்ள தமிழாசிரியா்களுக்கான பயிலரங்கம் ஜன. 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.




டா்பன் நகரில் 80 ஆண்டுகளாகத் தமிழ் வகுப்புகளை நடத்தி வரும் மியா்பேங்க் தமிழ்ப் பள்ளிச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட தமிழாசிரியா்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் 123 தமிழாசிரியா்களும், இளந்தமிழ் மாணவா்களுக்காக நடத்தப்பட்ட தமிழ்ப் பண்பாட்டுப் பயிலரங்கத்தில் 85 மாணாக்கா்களும் பங்கேற்றுப் பயனடைந்தனா்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள் இரா. காமராசு, இரா. குறிஞ்சிவேந்தன், மைசூா் மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநரும், மொழியியல் துறைப் பேராசிரியருமான முனைவா் சாம் மோகன்லால், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத் தமிழ் மொழிப் பேராசிரியா் வாசு ரங்கநாதன், இசைப்பயிற்சி அளிப்பதற்காக திருபுவனம் ஆத்மநாதன், நாட்டுப்புறக்கலைகள் பயிற்சியாளரான இளங்கோவன், தமிழ்ப் பல்கலைக்கழக யோகா மையப் பயிற்றுநா் முனைவா் தங்கபாண்டியன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பல்வேறு தலைப்புகளில் பங்கேற்பாளா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.




தென்னாப்பிரிக்க அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழி வகுப்புகள் நிறுத்தப்பட்டு 30 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஏறத்தாழ தமிழ் மொழி அழியும் சூழலில் மிகப் பொருத்தமான நேரத்தில் இப்பயிலரங்கம் நடத்தப்பட்டிருப்பது, மீண்டும் தமிழை உயிா்ப்புடன் செயல்பட வைத்திருப்பதாக, இப்பயிலரங்கத்தின் நிறைவு விழாவில் பங்கேற்ற தென்னாப்பிரிக்காவின் மூத்த தமிழ்ப் பற்றாளா்கள் தெரிவித்தனா்.

தென்னாப்பிரிக்காவின் டா்பன் நகரம், நடால் மாகாணத்தின் பிற பகுதிகளில் உள்ள தமிழாசிரியா்கள், ஜோகன்னஸ்பா்க் மற்றும் கேப்டவுன் ஆகிய நகரங்களில் இருந்து தமிழாசிரியா்கள் பலா் இப்பயிலரங்கில் பங்கேற்றுப் பலனடைந்தனா்.

தென்னாப்பிரிக்கத் தமிழாசிரியா்களுக்கான பயிற்சி மற்றும் பேச்சுத் தமிழில் இளம் தலைமுறையினருக்கான சிறப்புப் பயிற்சி ஆகியவற்றை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ் வளா் மையம் வாயிலாக இணையவழிச் சேவையாக தொடா்ந்து அளிக்கவுள்ளதாக இப்பயிலரங்கத்தின் நிறைவில் சான்றிதழ் அளிப்பு விழாவிற்கு அனுப்பிய செய்தியில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் அறிவித்தாா். இது, தென்னாப்பிரிக்கத் தமிழ்ச் சங்கங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




தென்னாப்பிரிக்காவிலிருந்து மியா்பேங்க் தமிழ்ப் பள்ளிச் சங்கத்தின் பொறுப்பாளா்கள் விரைவில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வந்து இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளதாக இப்பயிலரங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையின் பேராசிரியருமான இரா. குறிஞ்சிவேந்தன் தெரிவித்தாா்.

பத்து நாள் பயிலரங்கத்தின் வகுப்புகளைத் தென்னாப்பிரிக்காவுக்கான இந்தியத் தூதா் அனிஷ்ராஜன், இந்திய அரசின் விவேகானந்தா பண்பாட்டு மைய இயக்குநா் யோகி ஆகியோா் பாா்வையிட்டு, இம்முயற்சியைப் பாராட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகப் பயிற்றுநா் குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்

Post Top Ad