காவலர் தேர்வு 1,000 பேரின் பணிநியமனம் நிறுத்தி வைப்பு!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, February 9, 2020

காவலர் தேர்வு 1,000 பேரின் பணிநியமனம் நிறுத்தி வைப்பு!!

காவலர் தேர்வு 1,000 பேரின் பணிநியமனம் நிறுத்தி வைப்பு!!
காவலர் தேர்வில் போலியான விளையாட்டு சான்றிதழ் கொடுத்ததாக எழுந்துள்ள புகாரையடுத்
து 1,000 பேரின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவர்களது நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழக காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத் துறை ஆகியவற்றுக்கான காவலர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்யூஎஸ்ஆர்பி) செயல்பட்டு வருகிறது. இந்த 3 துறைகளிலும் இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், சிறை வார்டன்கள் பிரிவில் 8,888 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம்தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு 15 மையங்களில் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 47 ஆயிரம் பேர் வெற்றி பெற்றனர். அதன்பிறகு இறுதியாக 8,800 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த 3 பணியிடங்களிலும் விளையாட்டு வீரர்களுக்கென 10 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஆனால், ஏராளமானோர் தகுதியற்ற சான்றிதழ்களை வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.ஆனால் பலர், பல்வேறு விளையாட்டு சங்கங்கள், அமைப்புகள் மூலம் சான்றிதழ்களை பெற்று விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு இடஒதுக்கீட்டில் தேர்வு பெற்று இருந்த அனைவரின் விளையாட்டு சான்றிதழ்களும் சரிபார்ப்பு பணிக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சுமார் ஆயிரத்து 13 பேரின் சான்றிதழ்கள் தகுதியற்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு இடஒதுக்கீட்டில் இடம் கேட்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் மற்ற மாநில அணிகளுடன் விளையாடி இருக்க வேண்டும். ஆனால், தமிழக விளையாட்டு ஆணையம் அங்கீகரித்த போட்டிகளில் பங்கேற்காமல் வேறு அமைப்புகள் நடத்திய போட்டிகளில் பங்கேற்றவர்களும், சங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பித்து இருப்பதும் தெரியவந்தது.
மேலும், சிலர் சங்கம், அமைப்புகளிடம் இருந்து போலியாக சான்றிதழ் பெற்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களது பணிநியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில், 200 பேர் கட்-ஆப் மார்க் அடிப்படையில் மற்ற பிரிவிலேயே தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. மற்ற 800 பேருடைய சான்றிதழ் தகுதியற்றது என்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு வேலை மறுக்கப்படும்.
இந்த விவகாரம் தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைமையக சிறப்புக் குழு ஒன்று சான்றிதழ்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதுபோன்ற சான்றிதழ்களை கொடுத்த ஆயிரம் பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. தவறான சான்றிதழ்களை கொடுத்து இருந்தாலோ, போலி சான்றிதழ் வழங்கி இருந்தாலோ அது மோசடி குற்றமாக கருதப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post Top Ad