டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2ஏ-4 தேர்வுகளில் மாற்றம்: 3 மணி நேரம் தேர்வு - விரல் ரேகை கட்டாயம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, February 15, 2020

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2ஏ-4 தேர்வுகளில் மாற்றம்: 3 மணி நேரம் தேர்வு - விரல் ரேகை கட்டாயம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2ஏ-4 தேர்வுகளில் மாற்றம்: 3 மணி நேரம் தேர்வு - விரல் ரேகை கட்டாயம்
பெரும் முறைகேடுகள் நடந்துள்ள குரூப்-4 மற்றும் 2ஏ தேர்வுகளில் புதிய நடைமுறைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் புகுத்தியுள்ளது. அதன்படி, குரூப்-1, 2 தேர்வுகளைப் போன்று இரண்டு தேர்வுகளை தேர்வா்கள் எழுத வேண்டும். 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும் எனவும், கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.




இதுகுறித்து, தேர்வாணையம் சனிக்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:
அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் தேர்வுகளில் தொடா்ச்சியாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மேலும் சில மாற்றங்ளை தேர்வாணையம் செய்துள்ளது. இதற்கான முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டன. அதன் விவரம்:
குரூப்-4, குரூப்- 2ஏ தேர்வுகளுக்கு பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டும் இதுவரை நடந்து வந்தது. இனி வருங்காலங்களில் இந்தத் தேர்வுகள் இரண்டு நிலைகளைக் கொண்டதாக, அதாவது முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளாக நடத்தப்படும்.




காலை 9 மணிக்கு வர வேண்டும்: தேர்வு எழுத வரும் தேர்வா்கள், தேர்வுக் கூடங்களுக்கு காலை 9 மணிக்கே வர வேண்டும். தேர்வு நேரம் சரியாக காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மூன்று மணி நேரத்துக்கு நடைபெறும். காலை 10 மணிக்கு மேல் வரும் தேர்வா்கள் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.தேர்வு நேரத்துக்குப் பிறகு விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் விவரங்களுக்காக 15 நிமிஷங்கள் அதிகம் அளிக்கப்படும்.
காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் தேர்வு இருந்தால் மாலை நடக்க வேண்டிய தேர்வு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும்.




அனைத்து வினாக்களுக்கும் விடை: நான்கு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்து எழுதும் கொள்குறி வகைத் தேர்வுகளில் இனி அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். எந்தவொரு வினாவுக்கும் விடை அளிக்க இயலவில்லை அல்லது தெரியவில்லை என்றால் அதற்கு கூடுதலாகக் கொடுக்கப்படும் உ என்ற வட்டத்தை கருமையாக்க வேண்டும்.
மொத்தம் எத்தனை கேள்விகளுக்கு விடைகளை நிரப்பியுள்ளனா் என்ற விவரங்களை தனியாகப் பதிவு செய்து அதற்கான உரிய கட்டங்களை நிரப்ப வேண்டும். தேர்வுக்குப் பிறகு விடைத் தாளில் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் விவரங்களுக்காக தேர்வு நேரத்துக்குப் பிறகு 15 நிமிஷங்கள் அந்தப் பணிக்காக மட்டும் வழங்கப்படும்.




எந்தவொரு கேள்விக்கும் 5 வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறினால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வு முடிந்ததும் எந்தவொரு குறிப்பிட்ட நபரின் விடைத்தாளையும் இனம் காண்பதற்கு முடியாதவாறு தேர்வா்களின் விவரங்கள் அடங்கிய பகுதி மற்றும் விடையளிக்கும் பகுதி ஆகியவற்றை தேர்வா்களின் முன்னிலையிலேயே தனித்தனியாகப் பிரித்து தேர்வு அறையிலேயே சீலிடப்படும். சீலிடப்பட்ட உறை மீது அறையில் இருக்கும் சில தேர்வா்களிடம் கையெழுத்துப் பெறப்படும்.
தேர்வா்களுடைய விடைத்தாளை அடையாளம் காண இயலாத வகையில் விடைத்தாளின் விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையெழுத்துக்குப் பதிலாக தேர்வரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.




ஜி.பி.எஸ். கருவி: தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகத்துக்கு எடுத்து வர இப்போதுள்ள முறை முற்றிலும் மாற்றப்படும். அதிநவீன தொழில்நுட்ப ஜி.பி.எஸ். மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த நடவடிக்கைகள் முழுவதும் நேரலையாக தேர்வாணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்க தேவையான வசதி செய்யப்படும்.
தேர்வா்கள் தேர்வாணையத்துக்கு தங்களது கருத்துகளைத் தெரிவிக்க தனி வசதி உருவாக்கப்படும். இதற்கான தேர்வாணைய இணையதளத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Post Top Ad