`3 மணிநேரம் மட்டும்தான் ஓஎம்ஆர் ஷீட்டில் இருக்கும்!' -`மேஜிக் பேனா' இளைஞரால் மிரண்ட சிபிசிஐடி!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, February 17, 2020

`3 மணிநேரம் மட்டும்தான் ஓஎம்ஆர் ஷீட்டில் இருக்கும்!' -`மேஜிக் பேனா' இளைஞரால் மிரண்ட சிபிசிஐடி!!

`3 மணிநேரம் மட்டும்தான் ஓஎம்ஆர் ஷீட்டில் இருக்கும்!' -`மேஜிக் பேனா' இளைஞரால் மிரண்ட சிபிசிஐடி!!

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மேஜிக் பேனா மூலம் எழுதப்படும் எழுத்துகள் 3 மணிநேரம் மட்டுமே தெரியும் என்று சிபிசிஐடி போலீஸாரிடம் சிக்கிய அசோக்குமார் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயக்குமார், ஓம்காந்தன், சித்தாண்டி ஆகியோர் அளித்த தகவலின்படி சிபிசிஐடி போலீஸார் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துவருகின்றனர். போலீஸாரின் நெருக்கடி காரணமாக சிலர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தேர்வு முறைகேட்டில் அழியும் தன்மை கொண்ட பேனா பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. அந்த மேஜிக் பேனாவை ஜெயக்குமாருக்கு சப்ளை செய்தது யார் என்று போலீஸார் விசாரித்தனர். போலீஸ் காவலின்போது ஜெயக்குமாரிடம் அதுதொடர்பாகக் கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது அவர் அளித்த தகவலின்படி சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அசோக்குமார் (24) என்பவரைப் பிடித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறுகையில், ``டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 50 பேரைக் கைது செய்துள்ளோம். புரசைவாக்கத்தைச் சேர்ந்த அசோக்குமாரிடம் , மேஜிக் பேனாக்களை வாங்கி தேர்வர்களுக்குக் கொடுத்ததாக ஜெயக்குமார் தெரிவித்தார். அதனால், அசோக்குமாரிடம் மேஜிக் பேனா குறித்து விசாரணை நடத்திவருகிறோம். அவரிடம் எத்தனை பேனாக்களை ஜெயக்குமாரிடம் கொடுத்தீர்கள், அதற்காக எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்பது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆனால், அந்தக் கேள்விகளுக்கெல்லாம் அசோக்குமார், ஒற்றை வரியில் பதிலளித்தார். ஜெயக்குமாரின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மேஜிக் பேனாக்களும் அசோக்குமாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மேஜிக் பேனாக்களும் ஒன்று என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. மேஜிக் பேனா குறித்து முழுவிவரத்தைப் பெற்றபிறகு அசோக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளோம்"என விவரித்தவர்கள்,

``விசாரணை முடிவில்தான் மேஜிக் பேனா குறித்த விவரங்களையும் அசோக்குமார் குறித்த தகவலையும் சொல்ல முடியும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் மேஜிக் பேனா மூலம் ஓஎம்ஆர் சீட்டில் எழுதினால் 3 மணி நேரத்துக்குப்பிறகு அந்த எழுத்துகள் தானாகவே மறைந்துவிடும் என அசோக்குமார் கூறியுள்ளார். மேலும், அவர் போலீஸார் முன்னிலையில் மேஜிக் பேனா மூலம் எழுதியும் காட்டினார். அவர் கூறியதுபோல எழுதிய பேப்பரில் 3 மணி நேரத்துக்குப்பிறகு எந்தவித எழுத்துகளும் தென்படவில்லை" என்கின்றனர்.


Post Top Ad