கிராம சபையில் பேசிய 5-ம் வகுப்பு மாணவி - ஓடோடி வந்த Mp மற்றும் அரசு அதிகாரிகள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, February 4, 2020

கிராம சபையில் பேசிய 5-ம் வகுப்பு மாணவி - ஓடோடி வந்த Mp மற்றும் அரசு அதிகாரிகள்

கிராம சபையில் பேசிய 5-ம் வகுப்பு மாணவி - ஓடோடி வந்த Mp மற்றும் அரசு அதிகாரிகள்



கிராமசபை கூட்டம் என்பது சடங்காக நடத்தப்பட்டு வரும் நிலையில் சமீபகாலமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் அரசு அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராம சபையில் இயற்றப்படும் தீர்மானம் என்பது யாராலும் மாற்ற முடியாத அளவுக்குச் சட்ட அங்கீகாரம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் மதுரை அருகே மீனாட்சிபுரம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் சஹானா என்ற 5-ம் வகுப்பு மாணவி,

``எங்கள் பகுதியில் ஆரம்பப் பள்ளி மட்டும் உள்ளது. உயர் நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் ஊரிலிருந்து 7 கிமீட்டர் தூரத்திலுள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. அப்படி செல்லும்போது நேரத்துக்கு பேருந்து வசதி இல்லை. எனவே, பேருந்து வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டும்' என்று பேசினார். பெரியவர்களே கிராம சபையில் கோரிக்கை வைக்கத் தயங்கும் நிலையில் 5-ம் வகுப்பு மாணவி பேசியது சமூக ஊடகங்களில் பாராட்டுகளைப் பெற்றது.

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி, ``குடியரசு தினத்துக்காக நான் டெல்லியில் இருந்தபோது மாணவியின் பேசியதை ஊடகங்களில் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோல, மாணவிகள் சிறுவர் சிறுமியர்களும் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இதுகுறித்து, உடனே நான் அதிகாரிகளிடம் பேசினேன். தற்போது பேருந்து விடப்போவதாக உறுதி அளித்துள்ளனர். இதுபோல அனைவரும் கிராம சபையில பேச வேண்டும். மாணவி சஹானாவை வாழ்த்துகிறேன்" என்றார்.



சஹானாவிடம் பேசினோம், ``நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு எந்தப் பிரச்னையில்லை. எங்க அக்கா உட்பட நிறைய அக்காக்கள் மாயாண்டிப்பட்டி உயர்நிலைப் பள்ளியில படிக்கப் போறாங்க. ஊருக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவை டவுன் பஸ் வருது. ஆனா, அது ஸ்கூலுக்குப் போற நேரத்துக்கு வராது. அதனால எங்க ஊர் அக்காக்களெல்லாம் 7 கிலோமீட்டர் நடந்து போவாங்க. அதுபோல வரும்போதும் நடந்து வருவாங்க. வர்ற வழியில பிராந்திக்கடை வேற இருக்குது. அதனால ஸ்கூலுக்கு போனவங்க திரும்பி வர்ற வரைக்கும் என் அம்மா அப்பா பயந்துகிட்டே இருப்பாங்க. ஊருல உள்ள எல்லோரும் புலம்புவாங்க. அப்பத்தான் எங்க ஊருல கிராம சபைக் கூட்டத்துல பேசலாம்னு நினைச்சேன். யாரும் எனக்கு சொல்லித்தரல. நானாத்தான் பேசினேன். இப்ப எல்லோரும் பாராட்டுறாங்க" என்றார்.

இந்தத் தகவல் மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் கவனத்துக்குச் சென்றதால், அவர் உடனே அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினார். உடனே மீனாட்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிக்கு பள்ளி நேரத்தில் பேருந்து விடுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்தத் தகவலைத் தெரிவிப்பதற்காக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீனாட்சிபுரத்துக்கு வருகை தந்தார். அங்கு மாணவி சஹானாவை சந்தித்தவர், சிறப்பாகப் பேசிய அவருக்கு பரிசு ஒன்றையும் அளித்தார்.

எம்.பி-யின் பாராட்டு மற்றும் பரிசைப் பெற்றபோது மாணவி சஹானா ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதனால் அங்குள்ளவர்கள் நெகிழ்ந்தனர்.


5-ம் வகுப்பு படிக்கும் மாணவி சஹானா, கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு துணிச்சலாக பேசிய காட்சிகள் வலைத்தளங்களில் வெளியாகி அவளுக்கு பாராட்டை பெற்றுத்தந்தன. சிறுமியின் கோரிக்கை குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. 

போக்குவரத்து அதிகாரி சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்து அந்த மாணவி கோரிக்கை வைத்த நேரத்துக்கு பஸ் விட்டனர். இதனால் ஊர்மக்களும், மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் தங்களுக்காக கிராமசபை கூட்டத்தில் பேசிய சிறுமி சஹானாவுக்கும் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர்.

Post Top Ad