கட்ட பஞ்சாயத்து ஆசிரியர்கள் யார் யார்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, February 10, 2020

கட்ட பஞ்சாயத்து ஆசிரியர்கள் யார் யார்?

கட்ட பஞ்சாயத்து ஆசிரியர்கள் யார் யார்?



வகுப்பு எடுக்காமல், கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை பட்டியல் சேகரித்துள்ளது. அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


அரசு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், அவர்களின் முன்னேற்றத்துக்கும், முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களின் பெயர்களை கெடுக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சில ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளை தவிர, மற்ற சர்ச்சைக்குரிய வேலைகளில் ஈடுபடுவதாக, பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. 

குற்றச்சாட்டுசில முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களிடம், அதிக கட்டணம் பெற்றுக்கொண்டு, தங்கள் வீடுகளிலும், தனியார் மையங்களிலும் டியூஷன் எடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். 

ஆனால், தாங்கள் பணியாற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பாட திட்டத்தின்படி முழு பாடங்களையும் நடத்தாமல், அரைகுறையாக விட்டு விடுகின்றனர். அதேபோல, சில ஆசிரியர்கள் ஏதாவது ஒரு சங்கம் துவக்கி அல்லது சங்க நிர்வாகிகளாக பதவி வகித்து, கட்டப்பஞ்சாயத்து செய்வதையே முழு நேர பணியாக மேற்கொள்வதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

ஆசிரியர்கள் பணி நியமனம், ஆசிரியர்கள் பணியிட மாாறுதல், தங்கள் குடும்ப மற்றும் உறவினர்களாக உள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெற்று தருவது, தரநிலை ஊதியம் வாங்கி கொடுப்பது போன்ற பணிகளுக்கு, இடைத்தரகராக செயல்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

பள்ளி வேலையை விட்டு விட்டு, அந்த நேரத்தில், கல்வி அலுவலகங்களுக்கு சென்று, இடைத்தரகர் பணிகளை மேற்கொள்வதும், தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் நடந்து கொள்வதும், அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற ஆசிரியர்கள், தங்களது காரியங்களுக்காக, அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குறித்தும், பிற ஆசிரியர்கள் குறித்தும், புகார் கடிதம் எழுதுவது, வேறு நபர்கள் துணையுடன் வழக்கு போடுவது, 'வாட்ஸ் ஆப்' மற்றும் தனிப்பட்ட வலைதள பக்கங்களில் வதந்திகளை பரப்பி, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பது போன்ற, தில்லுமுல்லு வேலைகளிலும் ஈடுபடுவதாக, பள்ளி கல்வித்துறை தலைமை அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்துள்ளது. 

இந்த ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் சில மாவட்ட அதிகாரிகள், பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் பட்டியலை, பள்ளி கல்வி துறையும், உளவு துறையும் திரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒழுங்கு நடவடிக்கைஇதில், மதுரை, விருது நகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில், பல கட்டப்பஞ்சாயத்து ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. 

அவர்கள் மீது, விரைவில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Post Top Ad