ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஒரு மருந்து... பல நிவாரணங்கள்!
ஆங்கில மருத்துவத்தைப் போல அல்லாமல் ஆயுர்வேத மருந்துகளுக்கு மட்டும் பல இடங்களில் தேன், நெய், வெந்நீர், கஞ்சி, சாதம், மோர் முதலியவற்றுடன் கலந்து சாப்பிட வேண்டும் என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள்? வெறுமனே வெந்நீருடன் சாப்பிட்டால் போதாதா? -தனலட்சுமி, பாண்டிச்சேரி.
ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தைக் கொண்டு பல உபாதைகளைக் குணப்படுத்தும் வகையில் அதிலுள்ள மூலப் பொருட்கள் செயல்படும் திறனுடையவை. அம்மருந்தை எதனுடன் கலந்து பயன்படுத்துகிறோமோ, அதற்குத் தகுந்தவாறு தன் செயல்திறமையை மாற்றி அமைந்து, நோயைக் குணப்படுத்தும் வகையில் வேலை செய்யும். சாரங்கதர ஸம்ஹிதை எனும் ஆயுர்வேத புத்தகத்தில் காணப்படும் ஒரு சூரண மருந்தின் மூலப்பொருட்கள் - கடலுப்பு 4 பங்கு, துவர்ச்சிலை உப்பு 2 ணீ பங்கு, பிடலவணம் 1 பங்கு, இந்துப்பு 1 பங்கு தனியா 1 பங்கு, திப்பலி 1 பங்கு, திப்பிலி மூலம் 1 பங்கு, கருஞ்சீரகம் 1 பங்கு, பச்சிலை 1 பங்கு , நாகப்பூ 1 பங்கு, தாளீசபத்ரம் 1 பங்கு, அம்லவேதஸம் (புளி) 1 பங்கு, மிளகு ணீ பங்கு, சுக்கு ணீ பங்கு, சீரகம் ணீ பங்கு, மாதுளம் பழத்தோல் 2 பங்கு, லவங்கப்பட்டை டீ பங்கு மற்றும் ஏலக்காய் டீ பங்கு என்ற கணக்கில் நுண்ணிய தூளாகப் பொடித்து, நன்கு சலித்து சூக்ஷ்மசூரணமாக இன்று விற்கப்படுகிறது.
இம் மருந்தை சுமார் 5 கிராம் எடுத்து, 150 மி.லி. உப்பு சேர்க்காத மோருடன் கலந்து சாப்பிட, பசிமந்தம், வயிற்றில் வாயுவின் தேக்கம் போன்றவை குணமடைந்து விடும். இதையே தயிரின் மீது நிற்கும் நீருடன் மட்டும் கலந்து சாப்பிட, குடலிலுள்ள அடைப்புகளை அகற்றி, குடலைச் சுத்தமடையச் செய்யும். க்ஷயம் எனும் உடல் இளைப்பு மற்றும் வறண்ட மூல உபாதையால் அவதிப்படுபவர்கள், இம் மருந்தை மாமிசச் சூப்புடன் கலந்து சாப்பிட, குணமானது விரைவில் கிடைக்கிறது. பௌத்திரம் எனும் உபாதைக்கு, வெந்நீருடன் கலந்து சாப்பிடலாம். தோலில் வரக்கூடிய அரிப்பு, படை, சிரங்குகளில் இந்த சூரண மருந்தை, ஆறிய வெந்நீருடன் சாப்பிட, அந்த உபாதைகளின் தாக்கத்தை வெகுவாகக் குறைக்கலாம்.
வயிற்றில் ஏற்படும் மப்பு நிலையால் உண்டாகும் வலியைக் குணப்படுத்த, சிறிது சூடான அரிசி வடித்த கஞ்சியுடன் பயன்படுத்துவது நல்லது.உண்ட உணவு சரியாக செரிமானமாகாமல், பெருமலமாக வெளியேற்றப் பட்டு துன்பப்படும் குழந்தைகளுக்கு, இந்த சூரணத்தை சுமார் 2 - 3 கிராம் எடுத்து, மோருடன் கலந்து சாப்பிட, மலப்போக்கானது கட்டுப்பட்டு, குழந்தைகள் நன்கு சாப்பிடத் தொடங்கும். உடலில் ஏற்படும் வீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க, தயிர் தண்ணீருடன் சாப்பிட நல்லது. இருமல், மூச்சிரைப்பு உபாதைகளில், உணவிற்குப் பிறகு, சிறிய அளவில் எடுத்து, சிறிது வெந்நீருடன் கலந்து சாப்பிட குணம் விரைவில் ஏற்படும். இதன் அளவு நபருக்கு நபர் மாறுபடும் என்பதால், இங்கு குறிப்பிடப்படவில்லை. குடலில் கிருமிகளின் தாக்கம் அதிகரித்து, ஆசன வாயில் அரிப்பும், தோலில் தடிப்பும் ஏற்பட்டு துன்பப்படும் சிறு பிள்ளைகளுக்கு, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளுடன் இம் மருந்தைச் சிறிது கலந்து உண்ணலாம்.
மூட்டுக்கு மூட்டு ஏற்படும் வீக்கம் மற்றும் வலி உபாதைகளில், பசியின் தன்மையைச் சீராக்கி, வீக்கத்தையும் வலியையும் குறைக்கும் வகையில், புளி கரைத்த நீரினோடோ, பலாகுடூச்யாதி எனும் கஷாயத்துடனோ கலந்து சாப்பிட, வீக்கமும் வலியும் நன்கு குறைகின்றன. இதய உபாதைகளில், இதயம் நன்கு சீராகச் செயல்பட, ணீ - 1 ஸ்பூன் (5 கிராம்) அளவில் 100 மி.லி. வெந்நீருடன் கரைத்து இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம். சிறிது உப்புச் சுவை அதிகமிருப்பதால், எதில் கலந்து உண்கிறோமோ, அப்பொருட்களில் உப்பைத் தவிர்த்து இதிலுள்ள உப்பை வரவேற்கலாம். மஞ்சள், தேவதாரு, சரளதாரு, யானைத் திப்பிலி, சிறுவழுதுணை, வெண்வழுதுணை வேர், ஓரிலை வேர். சதகுப்பை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சூரண மருந்து குழந்தைகளுக்குப் பல உபாதைகளைக் குணப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தித் தருகிறது.
உண்ணும் உணவு செரியாமல் வெளியேறும் கிராணி எனும் உபாதை, பசிமந்தம், வயிறு உப்புசம், பேதி, காய்ச்சல், மூச்சிரைப்பு, இருமல், காமலை, சோகை, hiநிறக்குறைவு, மேலும் பல குழந்தை உபாதைகளில் இந்த சூரண மருந்தை தேனுடன் மட்டுமோ, தேன் மற்றும் நெய் கலந்தோ, நெய்யுடன் மட்டுமோ கலந்துகொடுத்து பல உபாதைகளைக் குணப்படுத்தும். ஆயுர்வேத மருந்துவர்களின்ஆலோசனைப்படி இம் மருந்தைப் பயன்படுத்தி, குழந்தைகளின் நோய்களை குணமாக்கலாம். மருந்துடன் சேர்க்கப்படும் திரவப்பொருட்கள், அம்மருந்தின் செயல்பாட்டை உடலில் துரிதப்படுத்தி, செயல்திறனைக் கூட்டுவதால், மருந்தினுடைய பெருமையும், திரவப்பொருட்களின் தனியான செயல்குறைபாடுகளும் சேர்க்கையின் மூலம் சிறப்படைந்து நோய்களைக் குணப்படுத்துவதால், உங்களுடைய கேள்விக்கு இதையே பதிலாகக் கொள்ளலாம்.