மாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..!

மாறி வரும் உணவுப்பழக்கவழக்க முறைகளினால் இன்று மாரடைப்பு என்பது சாதாரணமாகி விட்டது. பெரும்பாலும் உணவு முறைகளால்தான் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறும் நிலையில், உணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரிட்டிஷ் இதழான பி.எம்.ஜேவில் வெளியிடப்பட்ட ஆய்வில் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, சோடியம் அதிகளவில் உடலில் சேருவது என கண்டறியப்பட்டுள்ளது.
சோடியம் குளோரைடு(உப்பு) பொதுவாகவே அனைத்து உணவுகளிலும் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. அனைத்து தயாரிப்புகளிலும் சேர்க்கப்படுவதால் நாம் எதிர்பாராத விதத்தில் உடலில் உப்பு சேருகிறது.
உப்பு அதிகளவில் உடலில் சேரும்போது, முதற்கட்டமாக உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். உயர் ரத்த அழுத்தத்தினால் இதயத்திற்கு ஆக்சிஜன், உணவைக் கொண்டு செழுலும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வர காரணமாகிறது.
நியூயார்க்கின் மவுண்ட் சினாய் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஐசில்மா பெர்கஸ் இந்த ஆய்வு குறித்து கூறுகையில், 'உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு சோடியம் காரணமாக இருப்பது இந்த ஆய்வின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக, சோடியம் குறைவதால் ரத்த அழுத்தம் குறைகிறது. உலகளாவிய மக்களிடையே பலதரப்பட்ட தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நமது உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 120/80mmHg என அளவில் இருக்க வேண்டும். இதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, எந்த ஒரு நோயும் வருவதற்கு முன்னரே தடுக்க வேண்டும். எனவே, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பின் அளவை குறைப்பது நல்லது' என்று தெரிவித்துள்ளார்.