உள்ளங்கை அரித்தால் பணம் வருமா?

உள்ளங்கை அரித்தால் பணம் வருமா?

சிலருக்கு உள்ளங்கைகளும் கால்களும் அடிக்கடி அரித்துக்கொண்டே இருக்கும். உள்ளங்கை அரித்தால் பணம் வரும், கால் அரித்தால் ஊருக்குப் போக நேரும், தோல் உரிந்தால் வளர்கிறோம் எனச் சொல்வார்கள்.

உள்ளங்கைகள் ஏன் அரிக்கின்றன?

அடிக்கடி அரித்தால் ஏதேனும் நோயா?

சருமமும் கூந்தலும் மூன்று வாரங்களுக்கு ஒருமுறை, தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். இதனால், முடி உதிர்வதும் மீண்டும் வளர்வதும், ஒரு சுழற்சியாகவே நடைபெறுகின்றன. அதுபோல், உடலில் இறந்த செல்களைச் சருமம் உதிர்த்துவிடும். குழந்தைகளைக் குளிக்கவைக்கும்போது, நாள்தோறும் தோல் உரிந்து, மீண்டும் புதுத் தோல் வளர்வது இயல்பானது. இது ஒரு சுழற்சியும்கூட. ஆனால், தோல் உரிவதால்தான் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்கொள்வது தவறு…

வானிலை மாறும்போது, சருமம் வறண்டு போவதால், சிலருக்கு உள்ளங்கை அரிப்பு ஏற்படலாம். அதிக வியர்வை, பூஞ்சை அல்லது கிருமித் தொற்றுகளால் அரிப்பு ஏற்படலாம்.

சிலருக்கு, பயன்படுத்தும் சோப், டிடர்ஜென்ட்களில் உள்ள கெமிக்கல்கள்கூட அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. சோப்பை மாற்றினால், அரிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சிலவகை உணவுகள் உடலில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.

இவர்கள், அரிப்பை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இருந்தாலும் அரிதாகச் சிலருக்கு உள்ளங்கை அரிக்கக்கூடும். அரிப்பு தொடர்ந்து இருந்தால், சொறி, சிரங்கு, சொரியாசிஸ் போன்ற நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். தோல் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

அடுத்தவர் பயன்படுத்தும் சோப்பு, துண்டைப் பயன்படுத்தக் கூடாது. வெளியில் சென்றுவிட்டு வந்தாலும், எதையேனும் தொட்டாலும், உடனடியாகக் கை, கால்களை சுத்தமாகக் கழுவுவது நல்லது.

யாருக்காவது சொறி, சிரங்கு பிரச்னை இருந்தால்கூட, கை குலுக்கும்போது, தொற்றுகள், கிருமிகள் பரவ வாய்ப்பு இருக்கிறது என்பதால், கைகுலுக்கிப் பேசுவதைத் தவிர்க்கலாம். எப்போதும் சருமத்தைச் சுகாதாரமாக வைத்திருப்பதன் மூலம், இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.




Related Posts:

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

3113879

Code