பணியிடை நீக்கம் செய்தாலும் ஜீவனப்படி வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு!!
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்குரிய ஜீவனப்படி வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தில் உள்ள தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் - சென்னை உயர் நீதிமன்றம்
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள ஜமீன் இளம்பள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலாளராக பணியாற்றிய இளங்கோ என்பவர், கையாடல் குற்றச்சாட்டு காரணமாக, பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் தனக்கு ஜீவனப்படி வழங்கக் கோரி இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜீவனப்படி வழங்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஜமீன் இளம்பள்ளி கூட்டுறவு வங்கி தலைவர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது, கூட்டுறவு சங்கச் செயலாளர் ஊழியர் அந்தஸ்துக்குள் வராததால், அவருக்கு ஜீவனப்படி வழங்க முடியாது என, கூட்டுறவு சங்க விதிகளையும், தமிழக அரசின் ஜீவனப்படி தொடர்பான சட்டப் பிரிவுகளையும் சுட்டிக் காட்டி மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பணியிடைநீக்க காலத்தில் வாழ்க்கையை நடத்துவதற்காக வழங்கும் ஜீவனப்படியை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தை மீறுவதைப்போன்றது என, செயலாளர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசின் சட்டத்தின் கீழும், கூட்டுறவு சங்க விதிகளின் கீழும், செயலாளரை ஊழியராகக் கருத முடியாது என்றபோதும், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியரின் ஜீவனப்படியை முழுமையாக மறுப்பதென்பது, அரசியல் சாசனத்திலுள்ள தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் எனச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், ஜீவனப்படி கோரி இளங்கோ அளித்த மனுவை ஆறு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.