சட்டம் படிக்க ஆசையா? Clat நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்கள்!!
சட்டம் படிப்பது பலருக்குக் கனவு. பேச்சுத்திறனும் சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட மாணவர்கள் சட்டத்துறையைத் தாராளமாகத் தேர்வு செய்யலாம். மிகுந்த மரியாதையையும் அங்கீகாரங்களையும் பெற்றுத்தரும் சட்டப் படிப்புகளை தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டியது அவசியம்.
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசியச் சட்டப் பள்ளி (Tamilnadu National Law School) உட்பட, இந்தியா முழுவதும் 22 சட்டப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் B.A., LL.B (Hons) மற்றும் B.Com., LL.B (Hons) ஆகிய ஐந்து வருட இளநிலைப் பட்டப்படிப்புகளிலும், LL.M எனும் ஒரு வருட முதுநிலைப் பட்டப்படிப்பிலும் சேருவதற்கான பொதுச் சட்டச் சேர்க்கைத் தேர்வுக்கு (Common Law Admission Test - CLAT) விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
நுழைவுத் தேர்வுக்கான தகுதிகள்:
இளநிலைச் சட்டப்படிப்புகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45% மதிப்பெண்களுடனும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
முதுநிலைச் சட்டப்படிப்புக்கு LL.B அல்லது அதற்கு இணையான தேர்வில் பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50% மதிப்பெண்களுடனும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
2020 மார்ச் / ஏப்ரல் மாதங்களில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிக்கான தேர்வை எழுத இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
விண்ணப்பம்:
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://consortiumofnlus.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பொது மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்கள் ரூபாய் 4,000/-, எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் ரூபாய் 3,500 என்று விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.3.2020.
தேர்வு நாள்:
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தேர்வுக்கான அனுமதி அட்டையை தேர்வு நாளுக்கு 10 நாள்களுக்கு முன்பாக மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு இணையவழித் தேர்வாக 10.5.2020 அன்று நடைபெறும். தேர்வுக்குப் பின்பு 11.5.2020 அன்று தேர்வுக்கான முதற்கட்ட விடைத்தாள் வெளியிடப்படும். விடை குறித்த மாற்றுக் கருத்துகள் இருப்பின் 12.5.2020 முதல் 15.5.2020 வரை தெரிவிக்கலாம். 18.5.2020 இறுதி விடைத்தாள் வெளியிடப்படும். 24.5.2020 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
நுழைவுத்தேர்வில் ஆங்கில மொழி அறிவு, பொது அறிவு மற்றும் நடப்புக்கால நிகழ்வுகள், கணிதம், சட்ட அறிவு (லீகல் ஆப்டிடியூட்) மற்றும் பகுத்து ஆராயும் திறன் (லாஜிக்கல் ரீசனிங்) ஆகிய ஐந்து பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
மாணவர் சேர்க்கை:
தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசியச் சட்டப் பள்ளி உட்பட இந்தியா முழுவதும் இருக்கும் 22 சட்டப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையைப் பெறமுடியும். மாணவர் சேர்க்கை பெற விரும்பும் தேசியச் சட்டப் பல்கலைக்கழகம் குறித்த முழுமையான தகவல்கள், மாணவர் சேர்க்கைத் தகவல்கள், கல்விக் கட்டணம், தங்கும் விடுதி மற்றும் உணவுக் கட்டணம் போன்ற தகவல்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இந்த நுழைவுத்தேர்வின் ரேங்க் அடிப்படையில் பல்வேறு தனியார் சட்டக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.
கூடுதல் தகவல்கள்:
தேர்வு குறித்து கூடுதல் தகவல்களுக்கு https://consortiumofnlus.ac.in/ இணையதளத்தைப் பார்வையிடலாம். அல்லது 08047162020 எனும் அலைபேசி எண்ணில் வேலை நாள்களில் காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை தொடர்புகொண்டு பெறலாம்.