Tnpsc - முறைகேடு தடுக்க 6 அதிரடி முடிவுகள் அமல்
தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம் என, அறிவிக்கப் பட்டுள்ளது.'குரூப் - 4, குரூப் - 2, குரூப் - 2 ஏ' உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் எழுந்துள்ள முறைகேடு புகார்கள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார், நிர்வாக ரீதியாகஅறிவித்துள்ள சில மாற்றங்கள்:தேர்வாணையம் அனைத்து நிலைகளிலும், மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்ற உறுதி எடுத்துள்ளது.
மேலும், ஆறு முடிவுகளை, உடனடியாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைமுறைகள் முழுவதும் முடிந்ததும், இறுதியாக தேர்வு பெற்ற நபர்கள் தொடர்பான அனைத்து விபரங்களும், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் தொடக்கமாக, 'குரூப் - 1' தேர்வின் நடைமுறைகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில், 181 தேர்வர்களின் விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன தேர்வர்களின் விடைத் தாள்களை கட்டணம் செலுத்தி, இணைய தளத்தில் பெற்று கொள்ளலாம்.
இது, ஏப்., 1 முதல் அமலாகும் தேர்வுக்கு பின் கவுன்சிலிங் நடக்கும் நாட்களில், அந்தந்த நாளின் இறுதியில், எந்த துறை, எந்த மாவட்டம், இட ஒதுக்கீடு வாரியாக நிரம்பிய இடங்கள் மற்றும் காலியிடங்களின் விபரம், இணையதளத்தில் வெளியாகும். இதுவும், ஏப்., 1 முதல் அமலாகும் தற்போது, விண்ணப்பிக்கும் போதே, தேர்வு மையத்தை, தாங்களே தேர்வு செய்யும் முறை உள்ளது. இனி, தேர்வர்கள் மூன்று மாவட்டங்களை, தங்களின் விருப்ப மையமாக தேர்வு செய்ய வேண்டும். தேர்வு மையத்தை, தேர்வாணையமே ஒதுக்கும்.
ஒவ்வொரு தேர்விலும், ஒருவர், ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க, ஆதார் எண் கட்டாயமாக்கப்படும். தேர்வர்கள், விரல் ரேகையை, ஆதார் தகவலுடன் ஒப்பிட்டு பார்த்த பிறகே, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் வருங்காலங்களில், முறைகேடுகள் இருந்தால் தேர்வு முடிவு வெளியாகும் முன் அறிந்து, முழுவதும் தடுக்கப்படும் வகையில், உயர் தொழில்நுட்ப தீர்வு முறை, அமலுக்கு வரும். இதுதவிர, இன்னும் பல மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
'குரூப் - 4' தேர்வில் காலியிடம் அதிகரிப்புஅரசு துறைகளில் காலியாக உள்ள, வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, செப்., 1ல், 'குரூப் - 4' தேர்வு நடத்தப்பட்டது. இதில், 6,491 இடங்கள் நிரப்பப்படும் என,முதலில் அறிவிக்கப்பட்டது. பின், 2,907 கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இந்நிலையில், மேலும், 484 கூடுதல் காலியிடங்கள் நிரப்பப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதன்படி, மொத்தம், 9,882 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக,டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.