பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் கடினம் - மாணவர்கள் ஆசிரியர்கள் கருத்து - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, March 6, 2020

பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் கடினம் - மாணவர்கள் ஆசிரியர்கள் கருத்து

பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் கடினம் - மாணவர்கள் ஆசிரியர்கள் கருத்து

'பிளஸ்2 ஆங்கில தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது' என, மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்தாண்டு பிளஸ் 2க்கு புதிய பாடத்திட்டம் அமலானது. இதனால் வினாத்தாள் எவ்வாறு இருக்குமோ என்று மாணவர்கள் அச்சத்தோடு மார்ச் 2ல் தமிழ் தேர்வை எழுதினர். வினாக்கள் எளிதாக இருந்ததாக மகிழ்ந்தனர். நேற்று ஆங்கில பாடத்தேர்வு நடந்தது. இதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக கவலை தெரிவித்தனர்.


திண்டுக்கல்லில் தேர்வு எழுதியோர் கூறியதாவது: வி.சாருமதி, எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் பள்ளி: ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. பெற்றோர், ஆசிரியர் கழகம் வெளியிட்ட புத்தகத்தில் இருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தமிழை போல் எளிமையாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் வினாக்கள் கொஞ்சம் சிந்தித்து எழுதும்படி இருந்தது. முக்கிய வினாக்கள் பலவும் 'புக்பேக்'கில் இருந்து இடம் பெற்றிருந்தது. கொஞ்சம் படித்தவர்கள் குறைந்த மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறலாம். நன்கு படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெறலாம்.

கே.சிவசுப்பிரமணியன், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் பள்ளி: எதிர்பார்த்தது போல் வினாத்தாள் இல்லை. ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண் வினாக்கள் யோசித்து எழுதும்படி இருந்தது. நேரம் அதிகமாக இருந்ததால் அனைத்து கேள்விகளையும் எழுத முடிந்தது. புதிய பாடத்திட்டம் தொடர்பான சந்தேகம் இருந்தது. இனி மற்ற தேர்வுகளை தைரியமாக எதிர் கொள்ளலாம். புத்தகத்தின் உள் மற்றும் வெளிப்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் இத்தேர்வு பரவாயில்லை என்றளவில் இருந்தது.

கே.கயல்விழி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி: வினாத்தாளை பார்த்ததுமே ஒருவித பயம் தொற்றிக் கொண்டது. காலாண்டு, அரையாண்டு, மாதிரி தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் எதுவும் வரவில்லை. புத்தகம் முழுவதையும் படித்திருந்தவர்களுக்கு மட்டுமே இந்த தேர்வு எளிது. ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண் வினாக்கள் எங்களை திணறடித்தது. 15 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட பத்தி எழுதுதல் மட்டுமே சுலபமாக இருந்தது. சரியாக படிக்காத மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கொஞ்சம் கடினம் தான்.

ஜி.அனிதா, ஆங்கில ஆசிரியர், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் பள்ளி: மாணவர்களிடம் வினாத்தாளை வாங்கி பார்க்கும் வரை எனக்கும் பயமாகத்தான் இருந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக புத்தகம், 'புக்பேக்'கில் உள்ள கேள்விகள் இடம் பெற்றிருந்தன. சிந்தித்து எழுதினால் ஒரு மதிப்பெண் வினாவில் மதிப்பெண் நிச்சயம். சுமாராக படிக்கும் மாணவர்களும் சுலபமாக தேர்ச்சி பெறலாம். புத்தகத்தை முழுவதுமாக படித்த மாணவர்களே 90க்கு 90 மதிப்பெண்கள் பெற முடியும்

Post Top Ad