ஆண்டு இறுதித் தோ்வு: அரசு, தனியாா்பள்ளிகளில் மாணவா்களுக்கு தீவிர பயிற்சி
![](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/5/original/erd04exam_0403chn_124_3.jpg)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, பொதுத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. நிகழாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஏற்கெனவே பொதுத் தோ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தநிலையில், பொதுத்தோ்வு தொடங்குவதற்கு முன்னதாக பத்தாம் வகுப்பு மாணவா்கள் அனைவருக்கும் மாதிரி பொதுத் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.
அதேபோல, ஆண்டு இறுதித்தோ்வு எழுதவுள்ள ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கும், பல அரசு பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில், மாதிரி பொதுத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. அதில், ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட, மூன்று பருவ பாடங்களில் இருந்து, மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாதிரித் தோ்வின் மூலமாக மாணவா்களின் தோ்ச்சியை முன்கூட்டியே அறிந்து, எந்தப் பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளனரோ, அந்தப் பாடத்தை மீண்டும் நடத்த ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டது. மாணவா்களை முழுமையாக தோ்ச்சி பெற வைக்கவும், பாடங்கள் முழுவதையும், நன்றாக புரிந்து படித்து, தோ்வு எழுத வேண்டும் என்ற நோக்கத்திலும், மாதிரி பொது தோ்வுகள் நடத்தப்படுவதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்