10ம் வகுப்புக்கு தேர்வு உண்டு: ஊரடங்குக்கு பிறகு தேர்வு அட்டவணை,..அமைச்சர் அறிவிப்பு

10ம் வகுப்புக்கு தேர்வு உண்டு: ஊரடங்குக்கு பிறகு தேர்வு அட்டவணை,..அமைச்சர் அறிவிப்பு
சென்னை: ஒத்தி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு, ஊரடங்குக்கு பிறகு நடத்தப்படும். அதற்கான அட்டவணையும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு அவசியம். அதில் பெறப்படும் மதிப்பெண்கள் தான் அடுத்த உயர்கல்விக்கு முக்கியமானதாக உள்ளது. ஆகவே, பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும். ஊரடங்கு வரை தற்போதுள்ள தடை நீடிக்கும். இந்த தடை நீங்கியபிறகு 10ம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து முதல்வருக்கு தெரிவிக்கப்படும். பின்னர் ஊரடங்குக்கு பிறகு பத்தாம் வகுப்புக்கு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும். கோடை விடுமுறை விடாமல் மே மாதமே தேர்வு நடத்தலாம் என்று யோசிக்கிறோம். இது போன்ற இக்கட்டான நிலை இப்போதுதான் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பிளஸ் 2 தேர்வுகள் முடிந்துவிட்டன. குறைந்த காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும். தேர்வை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று நடத்தலாமா என்பது குறித்து அட்டவணை தயாரித்து முதல்வரிடம் அளிப்போம். அதன் பிறகு தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும். வரும் மே 3ம் தேதிக்கு பிறகு இந்த ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தேர்வு அறையில் ஒரு மாணவருக்கு ஒரு மாணவர் இடைவெளி விட்டு அமர வைக்கப்படுவார்கள்.
இந்த தேர்வு நடந்த பிறகு பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். பிளஸ் 2 தேர்வின்போது 23ம் தேதி நடந்த இறுதித் தேர்வில் கொரோனா காரணமாக 34,742 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று செய்தி வெளியானது. அதன்படி அவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும்.
தனியார் பள்ளிகள் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கூடாது என்று துறையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் வந்தால் உடனடியாக அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீட் பயிற்சி வகுப்பு நடத்த கோவையை சேர்ந்த இ-பாக்ஸ் என்ற நிறுவனம் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு கால அவகாசம் அதிகமாக உள்ளதால், தொலைகாட்சி ஊடகங்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல யூ-டியூப் மூலமாகவும் நடத்தப்படுகிறது. இப்போது நிலவும் கால நிலையை பொறுத்தவரையில் கல்வியாளர்கள், பெற்றோர் கருத்து கேட்கப்பட்டு கோடை விடுமுறை குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive