ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, April 17, 2020

ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

கொரோனா நோய்த் தொற்று காரணமாக மார்ச் 27-ந் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 14-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதன்பிறகான நாட்களில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே மாணவர்கள் தற்போது உள்ள விடுமுறையை எப்படி பயன்படுத்தி கொள்வது என்பதை திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவி காசி வெங்கட்ராமன் விளக்குகிறார்.
இம்முறை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் முதன் முதலாக புதிய பாடத்திட்டத்தின்படியும், வினாத்தாள் வடிவமைப்பு இல்லாமலும், நன்கு சிந்தித்து எழுதக்கூடிய கேள்விகள் இடம்பெறும் வினாத்தாள்களுக்கும் விடையளிக்க உள்ளனர். மேலும் இரு தாள்களாக எழுதப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழித்தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும்.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையில், ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே அதிகளவில் விடுமுறை விடப்பட்டிருந்தது. இனிவரக் கூடிய தேர்வுகளுக்கு விடுமுறை குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது. மாணவர்கள் இதற்கு தகுந்தவாறு தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
பொதுவாக எந்த பொதுத்தேர்வு தொடங்குவதற்கு 2 அல்லது 3 வாரத்திற்கு முன்னர், புதிதாக எந்தப் பாடப் பகுதியையும் படிக்காமல், ஏற்கனவே படித்த பாடங்களை திருப்புதல் (revise) செய்வது வழக்கம். ஏனெனில் படிக்காமல் உள்ள புதிய பாடப் பகுதிகளை படிக்க அதிக நேரமாகும். ஆனால் இப்போது புதிதாக தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்பட இருப்பதாலும், அதிக விடுமுறை நாட்கள் உள்ளதாலும் மாணவர்கள் படிக்காமல் விட்ட புதிய பாடப் பகுதிகளையும் படித்து அதிக மதிப்பெண்கள் பெற முயற்சி செய்ய வேண்டும்.
மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கைப்பேசி மூலமாக ஆசிரியர்களிடமோ அல்லது சக மாணவர்களிடமோ கேட்டுத் தெளிவு பெறலாம்.மேலும் வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடங்களை கற்கும் வகையில் இணைய வழிக் கல்வி வலைதளம் e-learn.tnschools.gov.in தமிழக பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்துப்பாடங்களும் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கணினி வசதி இல்லாத மாணவர்களும் தங்கள் செல்போன் மூலமாக,தாங்களே கற்றுக்கொள்ளும் வகையில் எளிய வடிவில் இது உள்ளது.இதைத் தவிர மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கல்வித்தொலைக்காட்சி வழியாக தினமும் பாடம் சார்ந்த வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
டி.டி. பொதிகை தொலைக்காட்சியிலும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை பாடம் சார்ந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகின்றன. மாணவர்கள் இவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ், ஆங்கிலப் பாடங்களில் மனப்பாடப்பகுதிகள் மற்றும்இலக்கணம் சார்ந்த பகுதிகள், கணிதப் பாடத்தில் செய்முறை வடிவியல் பகுதி மற்றும் வரைபடம், அறிவியல் பாடப்பகுதியில் உள்ள படங்கள், சமூக அறிவியல் பாடத்தின் வரைபடங்கள் மற்றும் காலக்கோடுகள் போன்றவற்றை அவ்வப்போது திருப்புதல் செய்யவேண்டும். கூடுதலாக அனைத்துப் பாடங்களிலும் ஒரு மதிப்பெண் வினாக்களை தயார்செய்து படிக்க வேண்டும்.

Post Top Ad