குடும்பமே சேர்ந்து கிணறு வெட்டி சாதனை: 14 நாட்களைப் பயனுள்ளதாக மாற்றிய ஆட்டோ ஓட்டுநர்!
ஊரடங்கு நாட்களை பலரும் பலவிதமாக கழித்து வருகிறார்கள். ஆனால் கேரளத்தின் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது குடும்பத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டு வீட்டுப் பயன்பாட்டுக்கான கிணற்றை வெட்டி முடித்து சாதித்துள்ளார்.
கேரளத்தின் பினராயி அருகில் உள்ள பொட்டன்பரா பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. அதேபகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். ஊரடங்கால் ஆட்டோ ஓட்ட முடியாத சூழல் எழுந்த நிலையில் வீட்டுக்குள் முடங்கிய ஷாஜிக்கு திடீர் என ஒரு யோசனை வந்தது. ஏற்கெனவே தன் வீட்டில் பயன்பாட்டில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் வற்றி இருப்பதோடு, அதன் நீர் ஊற்றுகளும் தூர்ந்துபோய் இருந்தது. அதற்குப் பதில் புதிய கிணறு வெட்டினால் என்ன என்பதுதான் ஷாஜியின் மனதில் உதித்த யோசனை.
தனது யோசனையை உடனடியாகச் செயல்படுத்தக் கிளம்பிய ஷாஜி, தனது குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் புதிய கிணறு ஒன்றை வெட்டி முடிந்துள்ளார்.
இதுகுறித்து ஷாஜி கூறுகையில், “எங்க வீட்டுக் காம்பவுண்டுக்குள்ளேயே புதிய கிணற்றை வெட்ட முடிவு செஞ்சோம். கிணறு வெட்டுவதைப் பொறுத்தவரை தண்ணீர் வருவதுதான் இலக்கு. இதனால் எப்போது வேலை முடியும், எத்தனை நாள்கள் வேலை நீடிக்கும் என்றே தெரியாமல்தான் களத்தில் இறங்கினோம். 14 நாள்களில் கிணற்றை வெட்டி முடித்தோம்.
36 அடியில் தண்ணீர் வந்தது. நான் ஆட்டோ ஓட்டுவதற்கு முன்பு கட்டிடவேலை, கிணறு தோண்டும் வேலைக்கெல்லாம் சிறுவயதில் போயிருக்கிறேன். அதேநேரம் மனித சக்தி இல்லாமல் தனி ஒருவனாகக் கிணற்றைத் தோண்டிவிட முடியாது. இதை வீட்டில் சொன்ன உடனே என் மனைவி பீனா, கல்லூரியில் படிக்கும் மூத்த மகள் பின்ஷா, பிளஸ் 1 படிக்கும் மகன் அபிஜே, என் சகோதரன் ஷானீஸ் ஆகியோரும் துணைக்கு வந்தனர்.
மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மதித்து சமூக இடைவெளிவிட்டே நின்று வேலை செய்தோம். ஒரு ஆர்வத்தில் வேலையைத் தொடங்கிவிட்டோம். ஆனால், ஆழம் அதிகரிக்க, அதிகரிக்க யார் கிணற்றுக்குள் இறங்கி நின்று உதவி செய்வார்கள் எனக் கேள்வி எழுந்தது. அப்போது என் மனைவி பீனா நான் செய்கிறேன் எனச் சொல்லி கிணற்றுக்குள் இறங்கினார். நான் வெட்டிப்போடும் மண்ணை அவர் தான் குட்டையில் சுமந்தபடி, கயிறு வழியாக மேலே ஏறினார். எங்கள் குடும்பத்தின் மொத்த உழைப்பின் வியர்வையும், கிணற்றுக்குள் தண்ணீரைப் பார்த்ததும் சந்தோஷமாக மாறிவிட்டது.
ஊரடங்கு சமயத்தில் மொத்தக் குடும்பமும் சேர்ந்து ஒரு லட்ச ரூபாய்க்கான வேலையைச் செய்திருக்கிறோம். ஆமாம், இந்தக் கிணற்றை வெளியாட்களை வைத்துத் தோண்டியிருந்தால் ஒரு லட்ச ரூபாய் ஆகியிருக்கும்” என்றார்.