பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியே தொடங்க தேர்வுத்துறை முடிவு?
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை மறு நாள் தொடங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 23ம் தேதியுடன் முடிந்தன.
தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கும் போதே, 22ம் தேதி முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்துவது என்றும், அதற்கு பிறகு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த வேண்டும் என்றும் தேர்வுத்துறை திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கப்படாமல் நின்று போனது.
மேற்கண்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டு, அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட இருந்தனர். ஊரடங்கு முடிந்த பிறகு இந்த பணியை தொடங்கலாம் என்று தேர்வுத்துறை முடிவு செய்தது.
இந்நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதால், 29ம் தேதிக்கு பிறகு விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர்கள் வருவதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை.
அதனால் வீடுகளில் இருந்தே ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த வைக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர்கள் வந்தால், ஒரு அறையில் குறைந்தபட்சம் 10 ஆசிரியர்கள் அமர்ந்து விடைத்தாள் திருத்த வேண்டிய நிலை ஏற்படும்.
அங்கு கண்காணிப்பு பணியில் இருவர் இருக்க வேண்டும். திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துவர ஒருவர் தேவை. இதனால் சமூக இடைவெளி இல்லாமல் போகலாம் என்பதால், ஆசிரியர்கள் வருவதில் சிக்கில் நீடிக்கிறது.
அதனால், ஊரடங்கு குறித்து அரசு தெளிவான முடிவு எடுத்து அறிவித்தால் தான் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால், 29ம் தேதிக்கு பிறகு இந்த பணியை தொடங்குவது என்பதில் தேர்வுத்துறை தீவிரமாக இருக்கிறது.