மே 3 முதல் கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படுகிறது : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
மே 3ம் தேதி முதல் கொரோனா பாதிப்பில்லாத நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தின.இதையடுத்து கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 14ம்தேதி காலை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.
இந்நிலையில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் ஒரு சில மாவட்டங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. ஆகையால் மே 3ம் தேதி முதல் கொரோனா பாதிப்பில்லாத நாட்டின் சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கான புதிய வழிகாட்டல் நெறிமுறைகளை அடுத்து வரும் நாட்களில் வெளியிட இருப்பதாகவும் அவை மே 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை ஏற்கனவே உள்ள ஊரடங்கு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.