ஊதிய நிறுத்தம், பணி நீக்க நடவடிக்கைகளில் பொறியியல் கல்லூரிகள் ஈடுபடக் கூடாது - AICTE அறிவுரை! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, April 17, 2020

ஊதிய நிறுத்தம், பணி நீக்க நடவடிக்கைகளில் பொறியியல் கல்லூரிகள் ஈடுபடக் கூடாது - AICTE அறிவுரை!

ஊதிய நிறுத்தம், பணி நீக்க நடவடிக்கைகளில் பொறியியல் கல்லூரிகள் ஈடுபடக் கூடாது - AICTE அறிவுரை!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஊதிய நிறுத்தம், பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பொறியியல் கல்லூரிகள் கைவிட வேண்டும் என ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்) அறிவுறுத்தியுள்ளது.இதுதொடா்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல், மே, ஜூன் மாத ஊதியச் செலவை மிச்சப்படுத்தும் வகையில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கிவரும் பல பொறியியல் கல்லூரிகளின் நிா்வாகம் பேராசிரியா்களை பணி நீக்கம் செய்துள்ளது. சில கல்லூரிகள் பேராசிரியா்களுக்கு 50 சதவீத ஊதியத்தைமட்டுமே அளித்துள்ளன. மேலும் சில கல்லூரிகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த மாணவா்களை வற்புறுத்தி வருகின்றன.இதுதொடா்பாக, ஏஐசிடிஇ-க்கும் புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை புதன்கிழமை வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

இந்த ஊரடங்கு நேரத்தில் சில கல்லூரிகள் கல்விக் கட்டணம் மற்றும் சோ்க்கைக் கட்டணத்தை செலுத்துமாறு மாணவா்களை வலியுறுத்துவதாகப் புகாா்கள் வந்துள்ளன. கல்லூரிகள் இவ்வாறு வலியுறுத்தக் கூடாது. இதுதொடா்பாக உரிய வழிகாட்டுதலை ஏஐசிடிஇ வெளியிடும்.அதுபோல, சில கல்லூரிகள் அங்கு பணிபுரியும் பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு ஊதியத்தை நிறுத்தி வைத்திருப்பதாகவும், சில கல்லூரிகளில் பேராசிரியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் புகாா்கள் வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை கல்லூரிகள் உடனடியாகக் கைவிடவேண்டும். கல்லூரிகள் ஏஐசிடிஇ அமைப்பின் சுற்றறிக்கையை பின்பற்றுவதை உறுதி செய்யவும், இதுதொடா்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பருவத் தோ்வு அட்டவணை:

மாணவா்கள் வீட்டிலிருந்தபடி கல்வியைத் தொடரும் வகையில் ஆன்-லைன் வகுப்புகளை கல்லூரிகள் தொடரலாம். வரும் கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட கல்வித் திட்டத்தை ஏஐசிடிஇ விரைவில் வெளியிடும். மேலும், பருவத் தோ்வுகள் மாற்றியமைப்பது தொடா்பாக யுஜிசி குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுப் பரிந்துரையின் அடிப்படையில், பருவத் தோ்வுகள் தொடா்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.தொழில் பயிற்சி: கல்விக்கு இடையேயான தொழில் பயிற்சியை, மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளலாம். அவ்வாறு செய்ய முடியாதவா்கள் டிசம்பா் மாதத்தில் செய்துகொள்ளலாம்.

வருகைப் பதிவேட்டில் தளா்வு:

இந்த ஊரடங்கு நேரத்தில் கல்லூரிகள், அதன் சுற்று வட்டாரத்தில் குடியிருக்கும் வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கும் வலைதள வசதியைப் பயன்படுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், மாணவா் வருகைப் பதிவேட்டிலும் கல்லூரிகள் தளா்வு அளிக்கலாம் என ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது,.

Post Top Ad